தமிழரசு கட்சி வரலாற்றில் முதல் தடவையாக பாரிய சிக்கலுக்குள்ளாகியுள்ளமை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை நீதிமன்றம் விதித்துள்ளமை தொடர்பான வழக்கு நகர்வுகளின் பின்னரான நாட்களிலேயே முடிவுகள் தெரியும். வழக்குகள், விசாரணைகள் தொடருமாக இருந்தால் எதிர்வருகின்ற தேர்தல்களில் தமிழரசுக் கட்சி போட்டியிடுவதும் கேள்விக்குறியாகலாம் என்ற கருத்துக்களும் நிலவுகின்றமை வேதனையான விடயம்தான்.

தமிழரசு கட்சியின் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னணியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பிரதானமாக இருப்பதாக பல தரப்புக்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றம் சாட்டி வருகின்றதை சமூக ஊடகங்களில் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலைமை தொடர்பாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேந்திரன் வெளியிட்டுள்ள கருத்தும் வருமாறு.

இரண்டு அணிகள் என்பதே வழக்கிற்கான மூல காரணம்.!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு என்ற கதையை கடந்த ஜனவரி 27, ம் திகதி நடந்த மத்தியகுழு மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் கௌரவ சுமந்திரன் அவர்களே மீளவும் ஒலிபெருக்கியில் பேசி உறுதிப்படுத்தினார்!

அவருடைய அணியை சேர்ந்தவர்களே தற்போது யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கொழும்பில் இருந்து சட்டத்தரணிகளை பல இலட்சம் ரூபாய் செலவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியாப்பு (உபவிதி) என்பது 74, வருடங்களாக உள்ளது ஆனால் அது தேர்தல் திணைக்களத்திற்கு கட்டாயம் வழங்கப்படவேண்டும்.

இந்த யாப்பின் படி கடந்த 16, மாநாடுகளும் இடம்பெறவில்லை யாப்புக்கு அப்பால் சில விட்டுக்கொடுப்பு இணக்கப்பாடு , பேசுதல், சமரசம் காணுதல் என்ற அடிப்படையில்தான் சகல மாநாட்டு தெரிவுகளும் தந்தை்செல்வா காலம் தொடக்கம் மாவை அண்ணர் காலம் வரை எட்டுத்தலைவர்களும் வழிப்படுத்தினர்.

கட்சியை இலங்கை நீதிமன்றில் காட்டிக்கொடுக்கவில்லை.

அப்போது இரண்டு அணிகள் இருக்கவில்லை ஒற்றுமையாக கட்சியை இயங்கவைத்தனர். இலங்கை நீதிமன்றில் அடவு வைக்காமல் பேசி கட்சியை சரி பிழைகளை கதைத்து கட்சியை முன்நோக்கி நகர்தினர்.

ஆனால் 17, வது இந்த மகாநாடுதான் தலைவருக்கு வேட்புமனுகோரி, மாவட்டங்களில் சென்று பிரசாரங்கள் மேற்கொண்டு ஜனநாயக கட்சி ஜனநாயக தேர்தல் என மக்களுக்கு கூறி தலைவர் தெரிவு இடம்பெற்றால் இருவரும் இணைந்து செயல்படுவோம் என பிரசாரங்களிலும் கூறிவிட்டு தலைவராக சிறிதரன் தெரிவான பின்னர் கடந்த ஜனவரி 27, ம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மத்தியகுழு, பொதுச்சபை கூட்டத்தில் கௌரவ சுமந்திரன் மகிரங்கமாகவே இரண்டு அணிகள் உண்டு தமது அணிக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படவேண்டும் அல்லது தமக்கு தரப்படவேண்டும் என கூறியதன் மூலம் தமிழரசுகட்சிக்குள் இரண்டு பிரிவு(அணி) உண்டு என்பதை உறுதிப்படுத்தினார்.

ஒரு உதாரணம் கடந்த 2019, ல் யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடந்த மாநாட்டில் எல்லாத்தெரிவுகளும் கௌரவ சுமந்திரன் எழுதிவாசித்து்நிறைவேறியது.

கட்சியாப்பில் இல்லாத பிரதி பொதுச்செயலாளர் இருவர், மூத்த துணைத்தலைவர் இருவர் என சிலரை திருப்திப்படுத்தி பதவி வழங்கப்பட்ட வரலாறும் உண்டு .

இரண்டு அணிகள் கதையால் குழப்பம் ஆரம்பமானது!

இந்த அணிகள் என்ற்இரண்டு பிரிவானது தற்போது ஒரு அணி வழக்கு தாக்கல் செய்து தமிழரசுக்கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உலகத்திற்கு நிருபித்துள்ளனர்.

எனவே கட்சியாப்பு எப்படி என்ன எழுதி இருந்தாலும் யாப்புக்கு அப்பால் பேசி பல விடயங்கள் கடந்த காலங்களில் ஒற்றுமையாக இணக்கப்பாடுடன் கட்சி முன்நோக்கி செய்த வரலாற்றை இந்த வழக்குமூலம் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பது நிருபணமாகியுள்ளது!

-பா.அரியநேத்திரன்-
18/02/2024