திருமலையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு!
-அரவி வேதநாயகம்

பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா திருகோணமலையில் நாளை 07 ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

திருமலை நகரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச.நவநீதன் தலைமையில் 2024.02.07 ம் திகதி பி.ப 4 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ்.ரத்நாயக கலந்துகொள்ளவுள்ளார்.

கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக முதல்வரென பல உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ள இவ்விழாவை திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் எழுத்தாளருமான சூ.பார்த்தீபன் தொகுத்து வழங்கவுள்ளார்.

எண்ணம்போல் வாழ்க்கை இலக்கியமன்றத்தின் ஒருங்கமைப்பில் இடம்பெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவின் வரவேற்புரையை எண்ணம்போல் வாழ்க்கை இலக்கிய மன்றத் தலைவர் எழுத்தாளர் கனகதீபகாந்தன் ஆற்றவுள்ளார். “கொத்துவேலி” நூலாசிரியர்பற்றிய அறிமுகவுரை, நூல்பற்றிய சிறப்பு நயவுரை என்பவற்றை முறையே சமூகசேவைத்திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எழுத்தாளர் இரா.கி.இளங்குமுதன் மற்றும் ஓய்வுநிலை அதிபர் கவிஞர் இரா.இரத்தினசிங்கம் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

சிவபாதசுந்தரம் சுதாகரனின் “நீலையூர் சுதா” எனும் புனைபெயருடன் கிராமிய மணங்கமளும் வகையில் நாட்டுப்புற வாழ்கை, நிகழ்கால நாட்டு நடப்புக்கள் என அனைவரும் ரசித்து வியக்கும் வகையிலான உயிரோட்டமுள்ள கவிதைப் படைப்புக்கள் தொகுப்பாக “கொத்துவேலி” எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமதி.லலிதா சுதாகரனால் “கிடுகு வீடு” எனும் தலைப்பிலும் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டு பெருவரவேற்பை பெற்ற “நீலையூர் சுதா”, பல ஆலய இறுவட்டுகளுகளுக்காக பாடல்களையும் எழுதியுள்ளார்.

அம்பாரை மாவட்டத்தின் வடக்கு எல்லையின் விவசாயக் கிராமமான பெரியநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட “கொத்துவேலி” நூலாசிரியரான பைந்தமிழ் சுடர் சுதாகரன்
கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார்.

“கொத்துவேலி” கவிதைத் தொகுப்பின் ஊடக அனுசரணையை கல்முனை நெற் ஊடக வலையமைப்பு மற்றும் @Saivamum_Tamizhum YouTube தளம் என்பன வழங்குவதுடன் நிகழ்வை நேரலையாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.