மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்க கல்முனை நூலகத்தில் விசேட செயற்றிட்டம்.!

(ஏ.எஸ்.மெளலானா)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம் கல்முனை பொது நூலகத்தில் இன்று வியாழக்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பிரதம அதிதியாகவும் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் கெளரவ அதிதியாகவும் பங்கேற்றிருந்ததுடன் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.சிவப்பிரகாசம் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை, ஆர்.கே.எம். வித்தியாலயம், இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயம் ஆகிய 04 பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இம்மாணவர்கள் கல்முனை பொது நூலகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்டு, அவற்றின் பயன்பாடுகளையும் முக்கியத்துவத்தையும் நேரடியாக கண்டறிந்து கொண்டதுடன் நூலகர் மற்றும் உதவி நூலகர்களினால் இவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இச்சிறப்பு நிகழ்வில் குறித்த பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களுடன் சமூக மற்றும் நூலக செயற்பாட்டாளர் எஸ்.எம். அபூபக்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.