அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல்

அமரத்துவம் அடைந்த பொன்.செல்வராசா அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி முழு அரசியல் வாதிகளுக்குமே முன் உதாரணமாக திகழ்ந்தவர் என தமிழரசு கட்சியின் கல்லமுனைத் தொகுதிக் கிளை தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட மறைந்த பொன்.செல்வராசா முதன் முதலில் 1994 ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டி முதன்முதலில் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். பின்னர் இரண்டாம் தடவை 2010 ம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தார். அன்னார் இக்கால நீண்ட வரலாற்றில் எத்தனை இன்னல்கள் இடர்கள் வந்தபோதிலும் என்றுமே கட்சியை விட்டு விலகாது தொடர்ந்து கட்சிக்காக தொண்டாற்றிய ஒருவர். சுகவீனம் அடைந்தவுடன் கட்சிப் பணியை அடுத்த தலைவர்களிடம் ஒப்படைத்து தனது ஒப்பற்ற சேவையினை தொடர்ந்தும் வழங்கி பெரும் மதிப்புறு தலைவர்களில் ஒருவராக திகழ்கின்றார்.

பல்வேறு சூழ்நிலைகளில் தன்னால் முடிந்த சேவையினை கட்சிக்காக வழங்கியதோடு கட்சியின் தொண்டர்களின் நலன், அக்கறை மற்றும் ஏதேனும் பிணக்குகள் ஏற்படும் சூழ்நிலையில் அதனை தீர்ப்பதிலும் தன்னாலான முழுப் பங்களிப்பையும் வழங்கியவர். அன்னார் இன்று எம்மத்தியில் இல்லாமல் போனமை கட்சிக்கும் தமிழ் இனத்துக்கும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அன்னாரின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற பிராத்திக்கின்றோம் என மேலும் அவ் இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.