நீதிபதியும் – மனசாட்சியும் – பதவி துறப்பும் – சேறடிப்புகளும்!

சமூக வலைத்தள விவாதங்களில் – மோதல்களில் கலந்துகொள்வதில் எந்த ஆர்வமும் ஏற்படுவதில்லை. காரணம் கருத்தியல் சார்ந்த, யதார்த்தவியலை தொட்டுச்செல்லும் உரையாடலகளை கடந்து, அவை தனிப்பட்ட தாக்குதல்களாகவும், சேறடித்தல்களாகவும் மாறுவதே இயல்பாகிப் போனதால், ஓரமாய் குந்தியிருந்து ஆரோக்கியமானவற்றை உள்வாங்கி, மௌனித்திருப்பேன்.

ஆனாலும் சில சமூகவலைத்தள விவாதங்களை கண்டும் காணாமல் கடந்து செல்ல முடியவில்லை. வலிக்கிறது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா உயிர் அச்சுறுத்தல், பதட்டம் காரணமாக தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து முழுமையான தன்னிலை விளக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் அவர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள், வலிகள், மிரட்டல்கள், வசைபாடல்கள் முதலானவற்றின் வலியும், அச்சமும் அவரால் மட்டுமே உணர முடியும். அவற்றை எதிர்கொள்ளாதவர்களால் அவற்றின் விளைவுகளை புரிந்துகொள்ள முடியாது.

அதனால், வெளிநாட்டில் தஞ்சம் அடைவதற்கானதும், சாகஸமானதுமாகவே, நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை, மலினமானவர்களால், விளங்கிக்கொள்ள முடியும்.

2006ல் நான் வெள்ளை வானில் கடத்தப்பட்ட போது அதனை அப்போதைய ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டு என்னை விடுவிப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணித்தார்.

ஊடக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. இந்திய, பிரித்தானிய, ஐரோப்பிய, அமெரிக்க தூதுவராலையங்கள், ஜே.வி.பி உள்ளிட்ட இலங்கையின் பிரதான கட்சிகள், அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு எனது விடுதலைக்கு உதவினர்.

ஆனால் எனது நட்பு வட்டத்தில் இருந்த என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த சில ஊடக நண்பர்கள், ஊடக பிரபலங்கள் உள்ளிட்டவர்கள், வெளிநாட்டில் தஞ்சம் அடைவதற்கான நாடகமாக எனது கடத்தலை வர்ணித்தார்கள்.

ஆனால் அவர்களில் இருவர் அந்த நிலையை தாமே சந்தித்த போது அந்த வலியை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

நான் கடத்தப்படுவதற்கு முன்னரே எனக்கு அச்சுறுத்தல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்துகொண்டிருந்தன. அதனால் கடத்தப்படுவதற்கு முன்பாக இரண்டு வாரங்கள் இந்தியாவில் விடுமுறையில் தங்கியிருந்து மீண்டும் பணிக்கு திரும்பினேன்.

இக்காலத்தில் அமெரிக்காவுக்கான 5 வருட மல்றிபிள் விசா என்னிடம் இருந்தது. பிரித்தானியாவுக்கான 5 வருட மல்றிபிள் விசாவில் 2 வருடகாலம் மீதம் இருந்தது. 2002 ற்கும் – 2006க்கும் இடையில் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட 12 ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து சென்றுவந்தேன். எனது ஒவ்வொரு பயணத்தின் போதும் கையை தூக்கு என்று என்நண்பர்கள் பலர் கெஞ்சுவார்கள். ஆயினும் இலங்கை வாழ்வையும் ஊடக பணியையும் மனதார நேசித்தேன் அதனால் கையை தூக்கவில்லை.

இப்படி இருந்தும் எனது கடத்தலை வெளிநாட்டு அரசியல் தஞ்சத்திற்கானது என பல அறிவுக்கொழுந்துகள் அடையாளப்படுத்தினார்கள்.

அன்றைய காலத்தில் சிலருக்கு ஒரு மனநோய் இருந்தது. கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட வேண்டும், அல்லது காணாமல் ஆக்கப்பட வேண்டும், குறைந்தது கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்க வேண்டும். கடத்தப்பட்டவர் முழுமையாக காயங்கள் இன்றி விடுவிக்கப்பட்டால் அது நாடகமாகிவிடும்.

ஆனால் நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின், 2006 செப்டம்பரில் இருந்து 2007 நவம்பரில் மீண்டும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்வரை இலங்கையிலேயே பணியாற்றினேன். அங்கு நிற்க முடியாத சூழல் முழுமையாக ஏற்பட்டதன் பின்பே மீண்டும் விசப்பரீட்சையில் இறங்காது பலரது ஆலோசனையின் பின் நாட்டை விட்டு புறப்பட்டேன்.

2008 ஜனவரி மாதமே பதவியில் இருந்து விலகினே். (அதுவரை லண்டனில் இருந்து என் பணியை தொடர்தேன்) அதன் பின்பே அரசியல் தஞ்ம் கோரினேன்.

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னான 14 மாதங்கள் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை சொல்லில் அடக்க முடியாது. இரவு வேளைகளில் எமது கொழும்பு வீட்டு ஒழுங்கையில் நாய்கள் குலைக்கும் போது கடத்தப்பட்ட நாள் ஞாபகம் வரும், தூக்கமின்றிய பதட்டம் தொடரும். வெளியில் செல்கின்ற போதெல்லாம் பின்தொடர்வார்கள். இரத்த அழுத்தம் இல்லாத எனக்கு இரத்த அழுத்த நோய் ஆரம்பமானது.

இந்த வலிகளையெல்லாம் எழுந்தமானமாக வசைபாடும் இந்த அறிவுக்கொழுந்துகளால் விளங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல், அவர்களின் கண்ணை, மனச்சாட்சியை மறைத்து விடுகின்றன.

சொந்த நாட்டில் பாதுகாப்பு, கௌரவம், ஆடம்பர வாழ்வு உள்ளிட்ட மதிப்பு மிக்க நீதிபதி பதவியை துறந்து இந்த வயதில் வெளிநாட்டில் தஞ்சம் கோர ஆசைப்படுவாரா? முனைவாரா? நீதிபதி சரவணராஜா! #ஞாபகங்கள்

You missed