மண்ணம்பிட்டிய விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு!

(அபு அலா)

கதுருவெல, மண்ணம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமத்திய மாகாண பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்குச் சென்ற பேருந்தொன்று மண்ணம்பிட்டிய பகுதியில் நேற்று (09) மாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலனறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அதுதொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதனுக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் தெரிவித்துள்ள இதேவேளை, விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், விபத்தில் உயரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.