நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இன்று சந்திக்கின்றார்.

வெடுக்குதாறி ஆலய நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையின் பெயரில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெறுகின்றது.

கொழும்பில் இடம்பெறும் இச் சந்திப்பிற்கான ஏற்பாட்டை ஓர் ஆலய நிர்வாகத்தினர் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வெடுக்குநாறி ஆலயத்தை சேர்ந்த மூவர் இன்று காலை கொழும்பு பயணிக்கின்றனர்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட சமயம் கடந்த 2ஆம் திகதி அவை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்படும் என அமைச்சர்களான டக்ளஸ் தேவானாந்தாவும் ஜீவன் தொண்டமானும் வாக்குறுதி அளித்தபோதும், அதனை நிறைவேற்றாது ஏமாற்றியதன் விளைவாக ஆலய நிர்வாகம் இதனை இந்திய தூதரகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஊடாக பாரதப் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

இவற்றின் அடிப்படையில் ஆலய வரலாறு, தற்போதைய வழக்கு நிலவரங்கள், இடையூறுகள் தொடர்பாக கேட்டறியும் நோக்கில் இன்று மாலை இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இவ்வாறு இந்திய அரசு குறித்த விடயத்தை கையில் எடுப்பதனால் இலங்கை அரசு ஆட்டம் காணுமா அல்லது சட்டத்தின் பெயரால் தொடர்ந்தும் அழுத்தம் வழங்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் ஏற்கனவே இந்தியா கடும் அதிருப்தி கொண்டு அதனை இலங்கை அரசிற்கு தெரிவித்துள்ள அதேநேரம் வெடுக்குநாறியும் இந்தியாவின் கையில் சென்றிருப்பது தமிழர்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.