பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (06.04.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருட்களின் கையிருப்பு தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

நடவடிக்கைகள்

அத்துடன், பொருட்களை மறைத்து வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல், உள்ளிட்ட நுகர்வோரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவது போன்ற செயற்பாடுகளைக் குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு, நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தபத்து தெரிவித்துள்ளார்.

முட்டைகள் இறக்குமதி

இதனிடையே, திரவ முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கான உரிய வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மேலும், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஊடாக இவ்வாறு திரவ முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் திரவ முட்டைகளை பேக்கரி உற்பத்திகளுக்காகப் பயன்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.