ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன வேறும் ஓர் இடத்தில் நிர்மானிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

சுமார் 30 கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட சந்தனப் பூங்கா என்னும் இடத்தில் ஜனாதிபதி மாளிகையும், செயலகமும் நிர்மானிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் கீழ் கோட்டேயில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வேறும் ஓர் அபிவிருத்தி திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

எனவே ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பனவற்றை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சந்தனப் பூங்கா பகுதியில் நிர்மானிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன இந்த பரிந்துரையை செய்துள்ளார். ஜனாதிபதி மாளிகை நிர்மானம் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒன்பது ஏக்கர் பரப்பிலான இந்தக் காணியில் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பனவற்றை நிர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் காணிகளுக்கு அருகாமையிலேயே பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமர் மாளிகை என்பனவற்றை நிர்மானிக்க முடியுமா என ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் புதிதாக ஜனாதிபதி மாளிகை நிர்மானம் பற்றிய பேச்சுக்கள் கடும் விமர்சனங்களை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.