நீலையூர் சுதாவின் “கிடுகு வீடு” வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே வாழ்த்துவோம்” போன்ற நிகழ்வு எமது சமூகத்திற்கு எழுச்சியூட்டும் நிகழ்வு; பெரியநீலாவணையில் கலையரசன் புகழாரம்!
-அரவி வேதநாயகம்

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் “நீலையூர் சுதா” வின் “கிடுகு வீடு” புத்தக வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே வாழ்த்துவோம்” போன்ற நிகழ்வு எமது சமூகத்திற்கு எழுச்சியூட்டும் நிகழ்வு என திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடும் “வாழும்போதே வாழ்
த்துவோம்” சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.

பெரியநீலாவணை கமு/சரஸ்வதி வித்தியாலய மண்டபத்தில் வைத்திய கலாநிதி கா.ஜெயசுதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிசன் பொது முகாமையாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் உடன் முதன்மை அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன், பீடாதிபதி கு.துரைராஜசிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள், பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மேலும் உரையாற்றுகையில், உண்மையில் சி. சுதாகரன் வேலைப்பழுமிகு நிறைவேற்று தர அதிகாரியாக இருக்கின்ற நிலையிலும் இவ்வாறான புத்தகம் ஒன்றை வெளியிட்டதன் மூலம் தான் பல்திறமை கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளார். அதுமட்டுமன்றி பெரியநீலாவணையின் ஆளுமைகளை ஒரே மேடையில் அலங்கரித்து கௌரவித்து மகிழ்ச்சியூட்டி முழு சமூகத்தையுமே எழுச்சியூட்டியிள்ளார். இது பெரியநீலவணை வரலாற்றில் முதல் நிகழ்வு. இதனை ஏற்பாடு செய்வதற்கு உதவியிருந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததுடன் எதிர்வரும் காலங்களில் நடக்கவிருக்கும் இதுபோன்ற கௌரவிப்பு நிகழ்வுகளில் இன்னும் பலபேர் வாழ்த்தி கௌரவிக்கப்படவேண்டிய அளவு பெரியநீலவணையின் வளர்ச்சி இருக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

சிவபாதசுந்தரம் சுதாகரன் “நீலையூர் சுதா” எனும் புனைபெயருடன் எழுதி முகநூல் வாயிலாக வெளிவந்த கிராமிய மணங்கமளும் வகையில் நாட்டுப்புற வாழ்கை, நிகழ்கால நாட்டு நடப்புக்கள் என அனைவரும் ரசித்து வியக்கும் வகையில் படைக்கப்பட்ட கவிதைப் படைப்புக்கள் தொகுப்பாக “கிடுகு வீடு” எனும் பெயரில் திருமதி. லலிதா சுதாகரனால் வெளியிட்டு வைக்கப்படது.

நூலின் முதல் பிரதியை திருமதி. லலிதா சுதாகரனிடம் இருந்து ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் பெற்றுக்கொண்டார். நூல் நயவுரையை கலைமாறன் செ.யோகராசா ஆற்றியதுடன் நூல் பற்றிய சிறப்புரையை திருமதி. சிவமணி நற்குணசிங்கம் வழங்கினார்.

அத்துடன் அதே மேடையில் பைந்தமிழ் சுடர் நீலையூர் சுதா வினால் பெரியநீலாவணையின் மறைந்த, ஓய்வுநிலை மற்றும் சேவையிலுள்ள கல்வியியலாளர்கள், உயர் அதிகாரிகள் என 24 பேர் “வாழும்போது வாழ்துவோம் – நீலையூரின் சாதனையாளர் விருது – 2022” எனும் தொனிப்பொருளிலான கல்விச் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்படனர்.

அம்பாரை மாவட்டத்தின் வடக்கு எல்லையின் விவசாயக் கிராமமான பெரியநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட சிவ.சுதாகரன் கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் ஐந்து சகோதரர்களுடன் பிறந்த சுதாகரன் சிறு வயதுமுதல் மிகவும் கஷ்டங்களை எதிர்கொண்டு தன்னை முன்னேற்றிக்கொண்டவர். விஞ்ஞானப் பட்டதாரியான சுதாகரன் விசேடமாக தான் அனுபவித்த, ரசித்த கிராமத்து வாழ்க்கையையே கவிதைகளில் சொல்லி வருவது சிறப்பம்சமாகும்.

மேற்படி நிகழ்வுகளுக்கான பிரதான ஊடக அனுசரணையாளர்களாக “கல்முனைநெற் ஊடக வலையமைப்பு” செயற்பட்டதுடன் முழு நிகழ்வுக்குமான நேரலையை கல்முனைநெற் முகப்புத்தக குழுமம் மற்றும் கல்முனைநெற் முகப்புத்தக பக்கம் என்பவற்றில் வாசகர்கள் கண்டுகளிக்க “கல்முனைநெற் ஊடக வலையமைப்பு” ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.