கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியை பெற்றுத் தருமா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கல்முனை 1d கிராம சேவகர் பிரிவில் உள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் ஏற்கனவே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த காணி உறுதிப் பத்திரங்கள் இதுவரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த காணி அனுமதி பத்திரங்களை கல்முனை தெற்கு பிரதேச செயலகம் தன்னகப்படுத்தி இதுவரை வழங்காமல் தாமதப்படுத்தி தமது பிரதேச செயலகத்துக்கு ஊடாகவே பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, அண்மையில் இப்பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ச்சியாக கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக விடயங்களில் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் தேவையில்லாது தலையிட்டு வருவதற்கு மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மக்கள் கல்முனையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் சில தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

ஆனால் கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவினால் தங்களுடைய கோரிக்கைக்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆகவே கல்முனை 01 D கிராம மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு காலம் தாழ்த்தாது மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் நீதியைப் பெற்றுத் தருவார்களா? என கேள்வி எழுப்புகின்றனர்.