9 வயது சிறுமியை சித்திரவதை செய்த 29 வயதுடைய பெண் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடுவெல பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி தனக்கு நேர்ந்த சித்திரவதை குறித்து கல்லூரியின் சமையல்காரரிடம் கூறியதையடுத்து, அவர் இது தொடர்பில் வகுப்பாசிரியைக்கு அறியப்படுத்தியுள்ளார்.
பின்னர், ஆசிரியை வழங்கிய அறிவிப்பின் பேரில் அதிபர், குறித்த சிறுமியுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் சிறுமியின் தந்தையின் இரண்டாவது மனைவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய பெண்ணுக்கு முந்தைய திருமணத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்கிடமான பெண் அதிகாலை 4 மணியளவில் சிறுமியை எழுப்பி தேங்காய் உரிக்கவும், காய்கறிகளை வெட்டவும், பானைகளை கழுவவும், குழந்தை மற்றும் அப்பெண்ணின் ஆடைகளை கழுவவும் உத்தரவிட்டுள்ளார்.
ஒருமுறை வேலை தவறினால் அந்த சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (10) சந்தேகநபர் சிறுமியை தரையில் வீசி கால்களை மிதித்து, முழங்காலால் வயிற்றில் அடித்ததாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் தனது குழந்தையுடன் படுக்கையில் உறங்குவதோடு, சிறுமிக்கு கிழிந்த பாய் ஒன்றை வழங்கி கீழே உறங்கச் செல்லியுள்ளார்.
சிறுமி வீட்டிற்குள் குளியலறையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் வீட்டின் பின்புறமுள்ள கழிவறையில் பொருத்தப்பட்டுள்ள குழாயில் இருந்து சிறுமியை குளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமியின் உடலில் பல தீக்காயங்கள் மற்றும் காயங்கள் இருந்ததாகவும், சில இடங்களில் தொடும் போது வலியால் அவதிப்படுவதாகவும் காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சிறுமியை இன்று (12) முல்லேரியா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தவுள்ளதாக கடுவெல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி கான் வீரசிங்க தெரிவித்தார். சந்தேக நபர் கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.