நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது சிறுவர் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும், சிறுவர் பெண்களோடு சேவையாற்றுபவர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் அவர்களால் முன்வைக்கப்படுகின்ற வேலைகள், எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக எதிர்வரும் 1ம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தினை சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் டீ ஜாசுகி ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வுக்கான நிதியினை சிறுவர் நன்னடத்தை திணைக்களம் மற்றும் AWF நிறுவனம் என்பன வழங்கியிரூந்தது.

இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம் எம் அச்சிமுகமட், காரைதீவு இலங்கை வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர்கள், சிறுவர் நன்னடத்தை திணைக்கள உத்தியோகத்தர், கோட்டக்கல்வி அலுவலக உத்தியோகத்தர், முன்பள்ளி ஆசிரியர் சங்க ஆசிரியர், தொழிற்பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு உத்தியோகத்தர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களன கிறிசலிஸ், HDO, Gafso என்பவற்றிலிருந்தும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.