நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதுடன், சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மருந்துத் தட்டுப்பாடு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கான அவசர பொறிமுறைமை ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

மருந்துகள் உட்பட சுகாதாரத் துறையின் ஏனைய தேவைகள் பற்றி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, மருத்துவ விநியோகப் பிரிவு, அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய ஒளடத ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாடுகளை சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது.

எனவே, சுகாதார அமைச்சினால் ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமித்து மாதாந்த முன்னேற்ற மீளாய்வைப் பெறுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த ஐந்தாண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய தொழில்நுட்பக் குழுவொன்றை நியமிக்கவும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வை.வி.என்.டி. சிறிசேன மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.