எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் நாம் பயணிக்கின்றோம் -காரைதீவு தவிசாளர்

பாறுக் ஷிஹான்

எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர். நிச்சயமாக எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் தான் நாம் பயணிக்கின்றோம்.

இக்கொலைக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும். காணிகள் தேவையெற்படின் அம்பாறை மாவட்டத்தில் நிதி கொடுத்து வாங்குங்கள்.

அப்பாவி மக்களை கொன்று விடாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை(12) மாலை அகம் மனிதபிமான வள நிலையம்(AHRC) சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) அமைப்பின் ஏற்பாட்டில் வீரமுனை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்ட வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு அவலங்களுக்கு உள்ளானார்கள்.

இந்த கொலைகளுக்கான நீதி உரிய முறையில் குடும்பங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான அப்பாவி மக்களை கொலைகள் செய்திருந்தார்கள்.

இந்த அஞ்சலியுடன் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம். சுனாமியில் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம். படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் நன்றி செலுத்துவோம்.

ஏனெனில் நன்றி மறக்காதது தமிழ் சமூகம். எங்களது முன்னோர்கள் எவ்வாறு இறந்தாலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எங்களது கடமையும் கலாச்சாரத்தின் பண்பாடும் ஆகும்.

ஆனால் இன்று சிலர் பழைய விடயங்களை ஏன் கிளறுகின்றார்கள். ஏன் அஞ்சலி செலுத்துகின்றார்கள் என்ற கேள்விகளை தொடுத்து இனங்களுக்கிடையே நல்லிணக்கம் சீர்குலைவதாக குறிப்பிடுகின்றார்கள். இது தவறான கண்ணோட்டமாகும்.

நீங்கள் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அப்பாவி மக்களை கொல்லக் கூடாது என்பதற்காகவே தான் நாங்கள் தொடர்ச்சியாக இவ்வாறான விடயங்களை வெளியில் கொண்டு வருகின்றோம்.

சமூகங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். மனிதர்கள் மனித உரிமைகளுடன் வாழ வேண்டும்.

மனிதனை மிருகங்கள் கொலை செய்வதை போன்று எவரும் எத்தனிக்க கூடாது என்பதற்காக இவ்வாறான விடயங்களை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றோம்.

சிலர் இவ்வாறான விடயங்களை தவறாக கூறி வரலாற்றினை மாற்ற முயல்கின்றார்கள்.

வரலாறானது கொலைகாரர்களையும் துரோகிகளையும் மறக்க பொதுமக்களை விடாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் எந்த மதத்திற்கோ எந்த குலத்திற்கோ எந்த இனத்திற்கோ எதிரானவர்கள் அல்லர்.1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற அவலக்குரல் இனிவரும் காலங்களில் கேட்க கூடாது.

அதற்கு இவ்வாறான கொலைகளின் சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டும் என்பதை எங்களுடைய தலைமைகள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஆனால் சிறு தவறு செய்யாத அப்பாவி இளைஞர்கள் சிறையில் வாடுகின்றார்கள். ஆனால் இவ்வாறான படுகொலைகளை செய்தவர்கள் எம் கண் முன்னே நடமாடி திரிகின்றார்கள்.

எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர்.

நிச்சயமாக எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் தான் நாம் பயணிக்கின்றோம்.

இக்கொலைக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும். காணிகள் தேவையெற்படின் அம்பாறை மாவட்டத்தில் நிதி கொடுத்து வாங்குங்கள். அப்பாவி மக்களை கொன்று விடாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஸ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வீரமுனையில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் வீரமுனையில் ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 55 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடம் தொடர்ச்சியாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்பும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நினைவேந்தலை நடத்தி வருகின்றோம் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.