ஆசிரியர் தொழிலை ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாக மாற்றும் நோக்கில், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறைசார் தொழில்முறையாளர்களுக்கான கட்டாயப் பதிவு, தொழில்முறை உரிமம் மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்காக கல்விச் சபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை சட்டவரைஞர் ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவே தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளின் அடிப்படையில், கல்விச் சபையை விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்துள்ள இந்த முன்மொழிவின் மூலம், நாட்டின் பொதுக் கல்வித் துறையில் தரம் மற்றும் தரநிலைகளை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கல்விச் சபையின் கீழ் ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் முறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர்.
மேலும், ஆசிரியர்களின் தொடர்ச்சியான தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில்முறை மதிப்பீட்டு முறைமையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் தனியார் கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கி, கல்வித்துறையின் தரத்தை மேலும் உயர்த்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
