(செல்வி வினாயகமூர்த்தி)

இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக முதலீட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. சுமார் 10 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழு மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளது.
இவ்விஜயம் தொடர்பான முதற்கட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸவின் பிரத்தியேக செயலாளர் பண்டார சமரக்கோன் தலைமையில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்கிரமராச்சியின் ஒருங்கிணைப்பில், மாவட்ட செயலகத்தில் இன்று (31) நடைபெற்றது.

அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் வர்த்தகக் குழுவினரை வரவேற்பது, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், தமிழ்–சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை–இந்தியா சிறுதானிய வர்த்தக தேசிய இணைப்பாளர் ஆறுமுகம் அசோகா, மாவட்ட வர்த்தக சங்க இணைப்பாளர் துசந்த இதுநில், மாவட்ட சங்க செயலாளர் சதுன் சேனாநாயக்க, திட்ட முகாமையாளர் உக்வத்த வுத்திக, மாவட்ட வர்த்தக சங்க உப தலைவர் நிரோஷ் சந்தன, ஆலையடிவேம்பு வர்த்தக சங்க தலைவர் இ. ஜெகநாதன், பொருளாளர் ச. நிரஞ்சலராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட வறுமை மற்றும் பொருளாதார சவால்களிலிருந்து மீள்வதையும், இன–மத வேறுபாடுகளைத் தாண்டி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் 5,555 பெண்களுக்கு சுயதொழில் வலுவூட்டல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவின் “மில்லட் பவுண்டேஷன்” நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் எஸ். சுந்தரின் எண்ணக்கருவின் அடிப்படையிலும், இலங்கை–இந்தியா நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற மலேசிய வர்த்தக மாநாட்டின் தீர்மானங்களுக்கு அமைவாகவும், இலங்கையில் பல்வேறு தொழில்முயற்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இலங்கையைச் சேர்ந்த வர்த்தகக் குழுக்கள் மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து சிறுதானிய உற்பத்தி, சுயசார்பு பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவு தொடர்பான நிறுவனங்களைப் பார்வையிட்டு, அங்குள்ள முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் குறித்து அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்திய வர்த்தக முதலீட்டாளர் குழுவின் இம்முறை இலங்கை விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.