பாறுக் ஷிஹான்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுதியைச் சேர்ந்த  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக இரு தரப்பினரும்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது  இரு தரப்பினரும் வாக்குமூலம் வழங்கிய பின்னர்  சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்ததையடுத்து  பொலிஸ் நிலையத்தின் பல்வேறு  குற்றத்தடுப்பு பிரிவு  பொறுப்பதிகாரி    உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரியின் அலுவலக அறையினை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியினால் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்  பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே பொதுமக்களும் ஏனையோரும் வேடிக்கை பார்க்கும் வகையில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர்.

 இதனால் அதிர்ச்சியடைந்த கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக இரு தரப்பினரையும் கைது செய்து, பொலிஸ் நிலையத்திலுள்ள இரு வேறு சிறைக்கூடுகளில் அடைத்தார்.

இச்சம்பவத்தின் போது   பொலிஸ் நிலையம்  வந்திருந்த சந்தேக நபரான  24 வயதுடைய இளைஞர்   இச்சம்பவத்தில் கைதாகி  சிறைக்கூடத்தில் இருந்தவர்களைத் தனது கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சம்பவ இடத்தில் கையும் மெய்யுமாகப் கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான்இ சந்தேகநபரைச் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வீடியோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கைத்தொலைபேசியைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும், வழக்கின் விசாரணைகளை மறுதவணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.