செல்லையா பேரின்பராசா
கல்முனை மாநகரில் உள்ள புகழ்பூத்த கல்லூரியான கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 143 ஆவது ஸ்தாபகர் தினத்தின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் இக் கல்லூரி அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் 02.07.2026 வியாழக் கிழமை காலை இடம்பெற்றது.
” ஒரு துளி இரத்தம் பல உயிர்களை வாழ வைக்கும் ” , ” வாருங்கள் இரத்தம் கொடுப்போம் உயிர் காப்போம் ” என்ற தொனிப்பொருள்களில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் இப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு ” குருதிக் கொடை ” அளித்தனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரியும் இப் பாடசாலையின் பழைய மாணவருமான டாக்டர்.நடராசா ரமேஸ், இரத்த வங்கியில் பணியாற்றும் டாக்டர். ஏ.ஜே.எப்.றிஸ்மியா மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளான முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் (வெஸ்ரர் றியாஸ்) ஓய்வுநிலை அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே வேளை குருதிக் கொடையாளர்களுக்கான சத்துணவுகள் மற்றும் குளிர்பானங்களை பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான க.பிரகலதன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
