-அஸ்லம் –

தலைநகரில் தனித்துவத்தோடு இயங்கும் புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் தலைவியாக திருமதி சிவகௌரி (சுடரி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியல்மாணி சிறப்புக் கற்கை மற்றும் உளவியல் சான்றிதழ் கற்கை நிறைவு செய்துள்ளதுடன் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர் ஆவார்.

தொழில் ரீதியாக 2008 இல் பதிவாளர் நாயக திணைக்களத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக முதல் நியமனம் பெற்றவர். தற்போது வவுனியா மாவட்ட பதிவகத்தில் மேலதிக காணிப் பதிவாளராக கடமை புரிகிறார்

அத்தோடு பதிவாளர் நாயக திணைக்களத்தின் தமிழ்- ஆங்கில மொழி பெயர்ப்பாளராகவும் நீதியமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

கலை, இலக்கியத் துறையில் இதுவரை சஞ்சிகைகள், ஆண்டு மலர்கள் போன்றவற்றிற்கு கவிதை, கட்டுரை சிறுகதை என ஆக்கங்கள் எழுதி வருகிறார்.

2025 ஆம் ஆண்டு முதல் பல நூல்களை வெளியிட்டு வருகிறார்.

இவரது முதலாவது கவிதை தொகுப்பு “பிரபஞ்ச பேரொளியே…”

அடுத்தது சிறுகதை தொகுப்பான “அவளுக்கென்று ஓர் உலகம்”

மற்றையது “காதலாகி….” எனும் கவிதை தொகுப்பு,

“உனக்குள் உன்னைத்தேடு” என்னும் கட்டுரை தொகுப்பு,

முத்துப்பரல்கள் ஹைக்கூ தொகுப்பு

என்பன அடங்கும். இன்னும் பல படைப்புகளும் வெளிவர உள்ளன.

சமூகத்திற்கு வழிகாட்டியாகவும் பொதுப் பணிகளில் ஈடுபடுபவராகவும் விளங்கும் இவர் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் தலைவியாக தெரிவாகி இருப்பது வாழ்த்துக்கும் பாராட்டுக்குமுரியது.