( வி.ரி. சகாதேவராஜா)

நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நாமகள் வித்தியாலயத்தில் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் நான் நிச்சயமாக புலமைப் பரிசில் தருவேன்.

இவ்வாறு அங்கு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய  “ஒஸ்கார்” பொருளாளரும் இணைப்பாளருமான தம்பியப்பா கணேசநாதன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளி ஏழாம் கிராமம் நாமகள் வித்தியாலய மாணவர்கள் அனைவருக்கும் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றியபோதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஒஸ்கார்” ( AusKar) அமைப்பின் தலைவர் ரத்தினசிங்கம் பிரதீபராஜ் வழிநடத்தலில்,   அவுஸ்திரேலியாவிலிருந்து விசேடமாக கலந்து கொண்ட “ஒஸ்கார்” அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும் பொருளாளரும் இணைப்பாளருமான தம்பியப்பா கணேசநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இத் திட்டத்திற்கு ஒஸ்கார் நிருவாக சபை உறுப்பினர் மயில்வாகனம் சஞ்சீவ் பூரண நிதியுதவி நல்கினார்.

இந்நிகழ்வு ,  நாமகள் வித்தியாலயத்தில்   நேற்று  ( 5)   வெள்ளிக்கிழமை  அதிபர் ஆர்.தவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக,  ஒஸ்கார் அமைப்பின்  பிரதிநிதியும், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.

அங்கு த.கணேசநாதன் மேலும் பேசுகையில்.

இளமையில் வறுமை என்னவென்பதை நான் அறிவேன். எனவே இத்தகைய மிகவும் பின்தங்கிய பகுதியில் கல்விகற்கும் உங்களுக்கு என்னாலான முழு உதவியையும் செய்வேன் . புலமைப் பரிசில் மாணவர்கள் சிறப்பு சித்தி பெற்றால் பெறுமதியான புலமைப் பரிசில் வழங்க இருக்கிறேன். இங்கு சிரமத்திற்கு மத்தியில் வந்து கற்பிக்கின்ற அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன். என்றார்.

நிகழ்வில்  70 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

நிகழ்வில் நலன்விரும்பி இரா.தவராஜா மற்றும்,ஆசிரியர்கள் மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

“ஒஸ்கார்”  அமைப்பினர்  கடந்த 15 வருடங்களாக இன்னொரன்ன பல  சேவைகளை காரைதீவில் மட்டுமல்லாமல்,  அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களிலும் பொலனறுவை மற்றும் பூண்டுலோயா உள்ளிட்ட மலையகத்திலும் செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.