( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 5000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம் 2026” பரதநாட்டிய மகா உலக சாதனை நடன நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.
கின்னஸ் சாதனை படைப்பதற்காக
சர்வதேச அளவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க பரதநாட்டிய மகா நடன பயிற்சி உலக சாதனை நிகழ்வான “சங்கமம் 2026” நிகழ்வை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஒருங்கிணைப்பு செய்கிறார்.
இலங்கையின் சங்கமம் லியா ஹொலிடேஸ் மற்றும் இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி ஆகிய நிறுவனங்கள் இணைந்து, தொன்மையும் பழமையும் வாய்ந்த தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பரதநாட்டிய கலையின் பெருமையும் , பாரம்பரியத்தையும் உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் (Guinness World Records) இடம்பிடிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மகா பரதநாட்டிய நடன நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.
இதில் சர்வதேச ரீதியாக 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ளனர்.
காரைதீவு விபுலானந்தா நாட்டிய நிருத்தியாலய மாணவிகள் 45 பேர் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று நடன ஆசிரியை செல்வி ஜெயகோபன் தாக்ஷாளினி தெரிவித்தார்.
இந்நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த 28/04 அன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் கலையரங்கில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆரம்பித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.




