கல்முனை ஸ்ரீ

அதிகாலை வேலை வீட்டில் வாசல் பெருக்கிக் கொண்டிருக்கும்போது மதில் மேலாகப் பாய்ந்து பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (2026.06.03) காலை 6.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, கல்முனை வட்ட விதானை வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் காலை எழுந்து வழக்கம் போல் வாசலைப் பெருக்கிக் கொண்டிருக்கும்போது மதில் மேலால் பாய்ந்த திருடன், பெண்மணி ஒருவர் அணிந்திருந்த தாலிக்கொடியை லாவகமாக அறுத்துக் கொண்டு மதில் மேலாகவே பாய்ந்து தப்பிச் சென்றுள்ளான்.

இதன்போது செய்வதறியாது அதிர்ச்சியில் திகைத்துப் போய் நின்ற அப்பெண்மணி பின்னர் அலறவே வீட்டார் ஓடி வந்து கேட்ட போதே சம்பவம் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸுக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் CCTV கெமராக்களின் காட்சிகளும் பெறப்பட்டு, திருடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுதவிர, இதுபோன்ற ஒரு சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்னரும் இப்பிரதேசத்தில் இடம் பெற்றது. அதாவது, காலை எழுந்து பூப்பறித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண்மணியின் மாலை அறுத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை நகரை அண்மித்த தமிழ் பிரதேசங்களில் தொடர்ச்சியாக அதிகாலை வேலை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.