(வி.ரி.சகாதேவராஜா)
சைவ மற்றும் கிராமியத் தெய்வ வழிபாடுகள் இடம்பெறும் ஆலயங்களில் சமகாலத்தில் DJ Remix குத்தாட்டம் எனும் போர்வையில் அரங்கேறும் கலாசாரச் சீரழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியவை என்று பிரபல சமய சொற்பொழிவாளர் எஸ். ஹரன்ராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்று பெருமை பேசும் நாங்கள், எங்களுடைய கலாசாரத்திலும் பண்பாட்டிலும் சைவ விழுமியத்திலும் ஆலயங்களில் இடம்பெறும் கேளிக்கைக் கும்மாளங்களை அனுமதிக்கக் கூடாது. DJ Remix எனும் பப் (Pub), களியாட்ட விடுதிகளில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் Hotel, Restaurant-இல் அதிகளவாகக் களியாட்டங்களுக்குப் பாவிக்கும் DJ இசையை, ஊர்வலம் எனும் பெயரிலும் பறவைக் காவடி எனும் பெயரிலும் கொண்டு வந்து எமது பாரம்பரியங்களைக் கச்சிதமாக அழிக்கத் துடிக்கும் யாரோ சிலருக்குக் காசு கொடுத்து, DJ-உம் எடுத்து எமது சமயத்தையும் கலாசாரத்தையும் நாமே அழிக்கும் ஒரு கேடுகெட்ட சமூகமாக சைவத் தமிழர்கள் மாறிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு…”.
“இதனை ஆலய நிர்வாகிகளோ அல்லது அரசாங்கத்தில் சம்பளத்துக்கு வேலை செய்யும் கலாசாரத்தைக் கட்டிக்காக்க வேண்டிய உத்தியோகத்தர்களோ அல்லது ஆலயத்துக்குப் பூசை தட்டுக் கொண்டு போயிட்டுப் பொன்னாடைக்குக் குனிந்து கொடுக்கும் அதிகாரிகளோ, இது தொடர்பாக ஆக்கபூர்வமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்திச் சீர்செய்ய வேண்டியது அவர்களுடைய தார்மீகப் பொறுப்பு மட்டுமல்ல, சைவத் தமிழராகப் பிறந்த எம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்”.
“சைவம் போற்றித் தமிழ் வளர்த்த எத்தனையோ சைவ சமயக் குரவர்கள், சந்தான குரவர்கள், 63 நாயன்மார்கள், சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மகான்கள் என்று தோன்றிய சைவ நெறியில், இந்தக் கலிகாலத்தில் கலி முற்றியதன் அறிகுறியாகத் தெருக்களிலே குத்தாட்டம் போடும் பெண்களும், மதுவெறியில் தலைதெறிக்க ஆடும் ஆண்களும் எப்படியெல்லாம் எமது பண்பாட்டைச் சிதைக்கின்றார்கள், அழிக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை”.
“பிற மதத்தவர் அவர்களுடைய வணக்கத்தலங்களை என்றுமே புனிதமாகக் கருதி இறை இல்லமாக நடத்துகின்ற வேளையில், எமது சமயத்தவர்களோ இறைவனின் இருப்பிடமான ஆன்மாக்கள் லயப்படுகின்ற ஆலயத்தைக் கேளிக்கைக் கும்மாளக் களியாட்ட விடுதியாக நடத்துகின்ற கலாசாரத்துக்கு இனிமேல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அல்லது இப்படிப்பட்ட கலாசாரச் சீரழிவுகளில் ஈடுபடுகின்ற நபர்களுக்கும் ஆலய நிர்வாகங்களுக்கும் வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுத்தால், இந்த நிலைமை எதிர்வரும் காலங்களில் மாற்றமடையலாம் என்பது எமது உறுதியான நம்பிக்கை”.
“வெளியே பயிரை மேய்ந்த கதையாக ஆலய நிர்வாகங்கள் இதனை வேடிக்கை பார்ப்பதும் அனுமதிப்பதும் கண்டனங்களுக்குரிய அறநெறி தவறிய செயற்பாடுகள். பக்தியை வளர்க்க வேண்டிய ஆலயங்களில் இதே நிலை தொடர்ந்தால், இன்னும் ஓரிரு வருடங்களில் அரைகுறையான ஆடைகளுடன் club dance போன்று ஆலயங்களில் ஆன்மீகம் வளர்ப்பதற்குப் பதிலாகக் காமக் களியாட்டங்களாக உருமாறும் என்பதை மிகுந்த மனவேதனையுடன் அறியத் தருகின்றேன்”.
“இந்த நிலையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆலயங்கள், அறநெறி அமைப்புகள், சைவ பக்த அடியவர்கள், சம்பந்தப்பட்ட கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர்கள், அதிகாரிகள், அலுவலகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் சைவத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது பண்பாட்டினைக் கட்டிக்காக்க முன்வர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்
