✍️அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக
முன்னாள் பிரதேச செயலாளரும் ஓய்வுநிலை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் அவர்களை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகள் இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ. அப்துல் ஜப்பார் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி சட்ட வலுவானது என்றும் அதன்படி சாய்ந்தமருது நகர சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வட்டாரப் பிரிப்புக்கான எல்லை நிர்ணயத்தை இரண்டு மாதங்களுக்குள் மேற்கொண்டு, அந்த சபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்ற பெற்றுத் தருவதற்காக வழக்குத் தாக்கல் செய்து, மிகுந்த அப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கு மறுமலர்ச்சி மன்றம் இதன்போது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் பொருத்தமான இடம் ஒன்றில் தற்காலிகமாக நகர சபை அலுவலகத்தை அவசரமாகத் திறப்பது, ஆளணியை ஏற்படுத்துதல், கனரக வாகன வசதிகள், இயந்திரங்கள் மற்றும் பௌதீக வளங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக
கலந்துரையாடப்பட்டது.
சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தலுக்கு முன்னதாக இவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்கு ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இது விடயத்தில் இலங்கை நிர்வாக சேவையில் அனுபவமும் ஆற்றலும் மிக்க ஓய்வுநிலை சிரேஷ்ட அதிகாரி என்ற ரீதியில் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் தனது நிபுணத்துவ ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் எனவும் நகர சபைக்கான செயற்றிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக நீங்கள் இருவரும் ஒரு மேசையில் இருந்து பேச வேண்டும் எனவும் மறுமலர்ச்சி மன்றத்தினால் வலியுறுத்தப்பட்டது.
சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவது தொடர்பிலான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கப்பபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களை மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகள் ஏற்கனவே நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடியிருப்பதாகவும் விரைவில் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாகவும் எடுத்துக் கூறப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சம்மந்தப்பட்ட அமைச்சுகளுக்கு தான் நேரடியாகச் சென்று, சில அதிகாரிகளைச் சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் விளக்கிக் கூறினார்.
மேலும், இந்த விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களை சந்தித்துப் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையொன்றின் அவசியத்தை மக்கள் மத்தியில் விதைத்து, விழிப்புணர்வூட்டுவதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் மறுமலர்ச்சி மன்றம் மேற்கொண்ட செயற்றிட்டங்களை நினைவு கூர்ந்து பாராட்டுத் தெரிவித்த ஏ.எல்.எம். சலீம் அவர்கள், மறுமலர்ச்சி மன்றத்தின் தற்போதைய முயற்சிகளுக்கும் வரவேற்பு தெரிவித்தார்.


