( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் பாணமை சந்தியில் இருந்து , காட்டிற்குள் இருக்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயம் நோக்கிச் செல்லும் பிரதான வீதிக்கான திசை நிர்ணய வீதி அறிவித்தல் பலகை இதுவரை பாணமைச் சந்தியில் நிறுவப்படவில்லை என பக்தர்களும் பொதுமக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பாணமை சந்தியிலிருந்து உகந்தமலை ஆலயத்திற்குச் செல்லும் பாதை பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வருடாந்த உற்சவ காலங்களிலும் கதிர்காமம் பாதயாத்திரை நடைபெறும் நாட்களிலும் ஆயிரக்கணக்கான மூவின பக்தர்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
எனினும், உகந்தமலை ஆலயத்திற்கான திசை நிர்ணய அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தால் வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் மற்றும் முதல் முறையாக வருகை தரும் யாத்திரிகர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பாணமை சந்தியில் இருந்து உகந்தமலை முருகன் ஆலயத்திற்கான வீதி அறிவித்தல் பலகையை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளரும் சமய ஆர்வலருமான கண.இராசரத்தினம் (கண்ணன்) கூறுகையில்.. பாணமைச் சந்தியில் மாத்திரம் அல்ல, அதனை அடுத்து வருகின்ற கண்ணகை அம்மன் கோயில் சந்தியிலும் கூமுனை சந்தியிலும் இதனை நிறுவினால் மக்களுக்கு பேர் உதவியாக இருக்கும் என்றார்.


