எமது தொழிற்சங்கத்திற்கு உரம் சேர்த்த ஊடக விருட்சம் சலீம்.
தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன் அனுதாபம்.
செல்லையா பேரின்பராசா
எமது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கு உரமூட்டியதுடன் சிறந்த பல ஆலோசனைகளை வழங்கி எம்மை வழிப்படுத்திய பிரபல ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எமது தொழிற்சங்கம் வளர்ச்சியடைய ஊடக நிறுவனங்களும் இந் நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் வழங்கிய ஒத்துழைப்புக்ககளை மறந்துவிட முடியாது.
ஆரம்ப காலத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமணி வி.ரி.சகாதேவராசா அதீத பங்களிப்பை நல்கியிருந்தார்.அவரைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் அண்ணன் ஓய்வுநிலை அதிபர் செல்லையா பேரின்பராசா, எம்.ஏ.அலிக்கான், தர்மேந்திரா, புவிநேசராசா கேதீஸ் போன்றேர் உட்பட பலர் நல்கிய ஊடக பங்களிப்பை மறந்துவிட முடியாது.
வடமாகாணத்தில் எமது தொழிற்சங்கத்தை புனரமைக்க முற்பட்ட வேளையில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா அண்ணன் தனது சொந்த வாகனத்தை வாடகைப் பணமின்றி தந்துதவி எம்மோடு மூன்று தினங்கள் பயணித்த தருணத்தில் சலீம் அண்ணன் எம்மோடு பயணித்து கூட்டங்களில் ஆற்றிய உரைகள் காதுகளில் ஒலிக்கின்றது.
நாம் இன்று எமது தொழிற்சங்கத்தின் ஆலோசகரான சலீம் அண்ணனை இழந்தாலும் அவர் ஆற்றிய நற்பணிகள் மூலம் அவர் எம்முடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் அஞ்சலிக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

