பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் ஆறுமுகம் அரசரத்தினம் இறையடி எய்தினார்!
( வி.ரி. சகாதேவராஜா)
கல்வி, இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அரிய மனிதர்களில் ஒருவரான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் ஆறுமுகம் அரசரத்தினம் நேற்று (28) புதன்கிழமை 83 ஆவது வயதில் சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இலக்கிய சேவையை பாராட்டி கலாபூஷணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் விருதும் வழங்கப்பட்டது.
களுதாவளையில் 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி பிறந்த அவர், சிறுவயதிலிருந்தே அறிவாற்றல், ஒழுக்கம், சமூக பொறுப்பு ஆகிய பண்புகளை வளர்த்துக் கொண்டவர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்பு பட்டத்தைப்பெற்றதுடன் செல்லம்மா இராஜகோபால் விருதையும் பெற்றது அவரது தமிழ்ப்புலமையை வெளிப்படுத்துகிறது.
களுதாவளையைச் சேர்ந்த பூமணி என்னும் நங்கையை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரேயொரு பிள்ளை.
ஏக புதல்வி வனிதா கிழக்கு பல்கலைக்கழக நுண்கலை சிறப்பு பட்டதாரி. தற்சமயம் பட்டிருப்பு வலய அழகியல் கல்வி இணைப்பாளராக சீரி ய பணியாற்றி வருகிறார். வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் அவர்களை 2003இல் அவர் கரம்பற்றினார்.
தொழில்முறை வாழ்வில் அரசரத்தினம் கச்சேரி எழுது வினைஞர் அரச உத்தியோகஸ்தர், விவசாய போதனாசிரியர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். விதைத்தொழில் கண்காணிப்பு பொறுப்பாளராகவும் செயல்பட்டு கிராமிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.
பின்னர் ஆசிரியராக பட்டதாரி ஆசிரியர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக பல பதவிகளில் பணியாற்றி இறுதியில் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளராக பட்டிருப்பு வலயத்தில் அரிய சேவையாற்றினார்.
அதனூடாக. எண்ணற்ற மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளார்.
அவரது நீண்டகால இலக்கிய சேவையைப்பாராட்டி கலாபூஷணம் விருது, முதலமைச்சர் விருது போன்ற கௌரவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலக்கிய உலகில் அரசரத்தினம் தனித்துவமான இடம் பெற்றவர். நவீனக் காப்பியவியல் (நான்கு தொகுதிகள்), முருகன் காப்பியம், பிள்ளையார் கதை, காப்பியவியற்கல் உள்ளிட்ட பல நூல்கள் அவரது ஆழ்ந்த தமிழறிவை வெளிப்படுத்துகின்றன.
இவரது படைப்புகள் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
அவரால் இயற்றப்பட்ட பொன்னூஞ்சல் பாடல் அவரது மருமகன் சுரேஸ் தலைவராக விருக்கும் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயம் உகந்தமலை முருகன் ஆலயம் தாந்தாமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட 18 ஆலயங்களில் இன்றும் பாடப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மெளனம் கற்றுக் கொடுக்கும் ஞானமும், சொல் கற்றுக் கொடுக்கும் தமிழும் அவரது வாழ்வின் இரண்டு கண்களாக விளங்கின.
கல்வி, இலக்கியம், சமூக சேவை என மூன்றையும் ஒருங்கிணைத்த அரசரத்தினம் அவர்களின் வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்குத் தன்னம்பிக்கையும் பண்பாடும் கற்பிக்கும் ஒரு வாழும் பாடமாக உள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை நீண்ட அஞ்சலி உரைகளோடு அவரது இறுதிச் சடங்கு களுதாவளை மயானத்தில் நடைபெறவிருக்கிறது.




