
முப்படையினருக்கும் தேசிய சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அதிகளவில் (சுமார் 40%) ஏற்படும் சில தொற்றுநோய்கள் மற்றும் உடல்நலச் சிக்கல்களை சித்த மருத்துவ முறைகள் மூலம் திறம்பட குணப்படுத்த முடியும் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அண்மையில் கடற்படை அதிகாரிகளை சந்தித்து, சித்த மருத்துவத்தின் மருத்துவத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் நீண்டகால பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின்போது, முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடல்நலப் பாதுகாப்பில் சித்த மருத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மேலும், சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்ற, பயிற்சி மற்றும் அனுபவம் கொண்ட அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்களை தேசிய சுகாதாரத் திட்டங்களிலும் பாதுகாப்புத் துறையிலும் இணைத்துக்கொள்ள வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் உடல்நலத்தை பாதுகாப்பதோடு, சுதேச மருத்துவ முறைகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முயற்சி எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குறைந்த செலவில், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை வாய்ப்புகள் முப்படையினருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கிடைக்கும் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது
