உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறுவதாக நேற்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் சுகாதார நிலையும், உலகளாவிய சுகாதார பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்ற கடும் எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.
மேலும், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டொலர் கட்டணத்தை கட்டாயமாகச் செலுத்த வேண்டும் எனக் கூறும் அமெரிக்க சட்டத்தை இது மீறுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
2025 இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது தவணைக்காக பதவி ஏற்று முதல் தினத்திலேயே இந்த அமைப்பில் இருந்து விலகுவதாக நிறைவேற்று உத்தரவை பிறப்பித்தார். இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்பதும் செலுத்த வேண்டிய நிலுவைகளை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க சட்டம் குறிப்பிடுகிறது.
எனினும் அமெரிக்கா 2024 மற்றும் 2025 இற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இன்னும் வழங்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியேற்றம் மற்றும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எதிர்வரும் பெப்ரவரியில் இடம்பெறும் உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்காவின் வெளியேற்றம் உலக சுகாதார அமைப்புக்கு நிதி அடிப்படையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையும். அந்த அமைப்பின் ஒட்டுமொத்த நிதியில் சுமார் 18 வீதத்திற்கு மேல் அமெரிக்கா பங்களிப்புச் செய்கிறது.
நன்றி – தினகரன்
