17, வது மகாநாடு இடம்பெறா விட்டால்
80,வது அகவையுடன் தமிழரசுக்கட்சி 2029,ல் காணாமல் போகும்!

இலங்கையில் 70, க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன அதில் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர் இல்லாத ஒரு கட்சி என்ரால் அது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிதான். கடந்த 2024,ஜனவரி,27, தொடக்கம் இன்று வரை ஏறக்குறைய இரண்டு வருடங்களாக பதில் பதவிகளுடன் இயங்கும் ஒரே ஒரு கட்சி இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மட்டுமே இது ஆச்சரியமான உண்மை கட்சி நிர்வாகத்தெரிவில் ஏற்பட்ட முரண்பாடுகாரணமாக இரண்டு நீதிமன்றங்களில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களாலேயே திருகோணமலையிலும்,யாழ்ப்பாணத்திலும் இரண்டு வழக்குகள் இந்த கட்சிக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டதுடன் இரண்டு அணிகளாகவும் தமிழரசுக்கட்சி பதில் பதவிகளுடன் இயங்குவதை காணலாம்.

2024, பொதுத்தேர்தலிலும், 2025, உள்ளுராட்சி தேர்தலிலும் வேட்பு மனுக்கள் பதில் செயலாளர் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு தேர்தல்களுக்கு முகம்கொடுத்துள்ள போதிலும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2029, ல் இடம் பெறுவதற்கு முன்னதாக நீதிமன்ற வழக்கில் இருந்து கட்சி விடுபெற்று 17, வது தேசிய மகாநாடு நடத்தப்பட்டு அதில் புதிய நிர்வாகத்தெரிவு நிரந்தரமாக தெரிவு செய்யப்படாமல் தற்போதைய பதில் பதவிகளுடன் இயங்கினால் 2029, ம் ஆண்டுடன் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி 80, வயதுடன் வடகிழக்கில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டு வேறொரு தமிழ்தேசியகட்சி எழுச்சிபெறும் வாய்ப்பு வரும்.

பதில் தலைவர், பதில் பொதுச்செயலாளருடன் 2029, பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிலை ஏற்படுமானால் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியில் உள்ள சிலரும்,தமிழரசுக்கட்சியில் உள்ள பலரும் வேட்பாளர்களாக போட்டியிட முன்வர மாட்டார்கள். அப்படியான அதிருப்தியாளர்கள் பலர் வடகிழக்கு தாயகத்தில் தமிழ்த்தேசிய கொள்கைப்பற்றாளர்கள் ஒன்றிணைந்து வேறு ஒரு தமிழ்த்தேசிய கட்சியை அல்லது புதியதொரு கட்சியை ஆரம்பித்து 2029, ல் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வாய்பு ஏற்படும் அன்றே தமிழரசுக்கட்சியின் ஆயுள் 80, வயதுடன் முற்றுப்பெறும்.

மாகாணசபை தேர்தல் வடக்கிலும்,கிழக்கிலும் அடுத்த ஆண்டு 2026,, ல் நடைபெறலாம் என நம்பப்படுகிறது அப்படி நடந்தால் அதற்கு இடையில் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வராமல் மகாநாடு புதிய நிர்வாத்தெரிவு இடம்பெறாமல் தொடர்ந்தும் தற்போதுள்ள பதில் பொதுச்செயலாளர் வேட்பு மனுக்களை வடக்கிலும், கிழக்கிலும் தமிழரசுக்கட்சி மூலமாக தாக்கல் செய்தாலும் சிதறி கிடக்கும் தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமையாக இணைந்தால் மட்டுமே தமிழரசுக்கட்சி மூலமாக கணிசமான ஆசனங்களை பெற வாய்புள்ளது. தனித்து தமிழரசுக்கட்சி போட்டியிட்டால் எதிர்பார்த்த ஆதரவை பெறமுடியாத நிலைமையே உள்ளது.

அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் இணைந்து தேர்தலில் ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கும் சேர்ந்து இயங்குவதற்குமான சந்திப்புக்களும், பேச்சுவார்த்தைகளும் தற்போது இடம்பெறுவதை காணமுடிகிறது இந்த முயற்சி வெற்றிபெற பல தடைகளை தாண்டவேண்டியுள்ளது. அரசியல் தீர்வு விடயம், மக்களை தேசமாக கட்டி எழுப்பும் விடயம் ஏனைய பொதுவிடயங்களுடன் தேர்தல் கூட்டு என்பன சகல கட்சிகளும் விட்டுக்கொடுப்புடன் ஒரு கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாக இணைந்து அரசியல் செயல்பாடுகளை முன்எடுக்பவேண்டிய கட்டாயம் ஈழத்தமிழர்களுக்கு உண்டு.

அதேவேளை மாகாணசபை தேர்தலில் அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒருமித்து தமிழரசு கட்சியில் வேட்பாளர்களை நியமித்தால் மட்டுமே அது சாத்தியமாகும் இல்லை எனில் எதிர்பார்த்த ஆசனங்களை எந்த ஒரு கட்சியும் பெறவாய்பில்லை பல கட்சிகளின் கூட்டாகவே மாகாணசபை ஆட்சியமையும் சூழல் உண்டு தமிழ்தேசிய கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் அது ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பாக மாறும் இந்த உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்தாலும் சில தமிழ் தலைவர்கள் உணரவில்லை.

கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழ் மக்களுடைய கொள்கையை உறுதி செய்யவே தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் ( நான்) சுயேட்சையாக சங்கு சின்னத்தில் போட்டியிட்டவேளை ஏழு தமிழ்தேசிய கட்சிகள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து பிரசாரம் வரலாறு உண்டு ஆனால் அதிலும் வேண்டுமென தமிழ் பொதுவேட்பாளரை தோல்வியுற செய்ய இலங்கை தமிழரசுக்கட்சியில் உள்ள ஒரு குழு ஜனநாயக மக்கள் சக்தி வேட்பாளர் சஜீத்திடம் சலுகைகளைப்பெற்று அவரை கருவியாக பாவித்து எந்த பொது அரசில் கொள்கையும் இன்றி ஆதரித்து பிரசாரம் செய்தது மட்டும் அன்றி அதே குழுவினர் தமிழரசுக்கட்சி ஆயுள்கால உறுப்பினராகவும், மத்தியகுழு உறுப்பினராகவும், மட்டக்களப்பு தொகுதி, பட்டிருப்பு தொகுதி, பட்டிப்பளை பிரதேச கிளைகளின் உபதலைவராகவும் உள்ள பா.அரியநேத்திரனுக்கு எதிராக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினர் அவர் வழங்கிய விளக்கத்துக்கு பதில் வழங்காமல் அவரை கூட்டங்களுக்கு அழைக்காமல் ஓரம் கட்டப்படுவதை காணலாம், ஆனால் தமிழரசுக்கட்சி அரியநேத்திரனை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்து பிரசாரம் செய்த ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியுடன் இணைந்து தற்போது கூட்டுச்சேர்வதற்கு தமிழரசுக்கட்சியினர் சம்மதித்துள்ளதை காணமுடிகிறது. அரசியலில் நண்பனும் பகைவனாவான். பகைவனும் நண்பனாவான் என்பது உண்மை ஆனால் தமிழ் பொதுவேட்பாளரான அரியநேத்திரனை பகைவனாகவே தமிழரசுக்கட்சி பார்பதுதான் வேடிக்கை. கடந்த 1994, தொடக்கம் 2024, வரையும் ஈபிடிபி டக்லஷ்தேவானந்தாவுடன் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயல்பட்ட மு.சந்திரகுமார் தற்போது கிளிநொச்சியில் சமத்துவ கட்சி எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் அவரும் தற்போது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியுடன் இணைந்து இலங்கை தமிழரசுக்கட்சியுடன் பேச்சுவார்தையில் கலந்துகொண்டுள்ளார் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வடமாகாணத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியுடன் தமிழரசுக்கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் சந்திரகுமாரின் சமத்துவக்கட்சிக்கு வேட்பாளர் இடம் கொடுக்கும்போது கிளிநொச்சியில் மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர் சி.சிறிதரன் அதனை ஏற்பாரா என்பது கேள்விக்குறியே.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடந்த 2010, தொடக்கம் தற்போது வரை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை பலமான மக்கள் அமைப்பாகவும், இளைஞர், மகளீர் அமைப்புகளை தமிழ்தேசிய கொள்கை யுடன் வழிநடத்தி வருபவர், பலவேலைத்திட்டங்களையும் தொடர்ந்து தக்கவைத்து தமிழரசுக்கட்சியின் செல்வாக்கை காப்பாற்றி வருகிறார் 2024, பாராளுமன்ற தேர்தலில் யாழப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற பிரதிநித்துவத்தை இவரே தக்கவைத்தார் சிறிதரன் இல்லை எனில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்முறை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளும் தேசிய மக்கள் சக்திக்கே சென்று தமிழரசுக்கட்சிக்கு இல்லாமல சென்றிருக்கும்.

கிளிநொச்சியில் சிறிதரனுக்கு 2010, தொடக்கம் 2024, வரை எதிராக செயல்படும் மு.சந்திரகுமாரை தமிழரசுக்கட்சியுடன் இணைப்பதை சிறிதரன் விரும்பமாட்டார் என்பது வெளிப்படையான உண்மை. இவ்வாறான நிலையில் புதிதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்தாலும் அது மாகாணசபை தேர்தலில் வேட்பாளர் பட்டியல் ஆசன ஒதுக்கீட்டில் கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் பல சிக்கல்களை தாண்டவேண்டிய நிலை உள்ளது.

கிழக்கு மாகாணசபை தேர்தலை பொறுத்தவரை மூன்று இன மக்கள் வாழும் மாகாணம் தமிழ்தேசிய கட்சி ஆட்சியமைக்க வேண்டுமெனில் மூன்று மாவட்டத்திலும் இருந்து பெறப்படும் 37, ஆசனங்களில் ஒரு கட்சி 19, ஆசனங்களை பெறவேண்டும் 19, ஆசனங்களை பெறவேண்டுமாயின் தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் ஒரு சின்னத்தில் வேட்பாளர்களை விட்டுக்கொடுப்புடன் நிறுத்தினால் மட்டுமே ஓரளவு சாத்தியமாகும் அதன்மூலம் தமிழர் ஒருவர் முதலமைச்சர் பதவியை பெறலாம் விட்டுக்கொடுப்பு ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக தமிழ்தேசிய கட்சிகள் பிருந்து மூன்று நான்காக கட்சிகளாக கிழக்குமாகாணத்தில் போட்டியிட்டால் தமிழர்களுடைய பிரதிநித்துவம் குறைந்து தமிழ் முதலமைச்சர் பதவியை பேரம் பேசும் நிலைகூட இல்லாமல் மீண்டும் முஷ்லிம் ஒருவரே முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்புள்ளது. முஷ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு சின்னத்தில் கிழக்குமாகாணத்தில் தேர்தலை சந்திக்கும் வேலைத்திட்டங்களை பள்ளிவாசல் சமூகம் மேற்கொண்டுவருவதையும் அறியமுடிகிறது.

தமிழ்தேசிய கட்சிகளின் ஒற்றுமைபற்றி சிந்திப்பதற்கு முன் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இரண்டு அணி ஒரு அணியாக செய்பட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி 17, வது மாகாநாட்டை கூட்டாவிட்டால் 80, ஆண்டுகள் நினைவுடன் 2029,ல். தமிழரசுக்கட்சி காணாமல் போகும் என்பதே உண்மை.

-பா.அரியநேத்திரன்.