காட்டாற்று வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் ;காரைதீவு போலீஸார் ஏற்பாடு 

( வி.ரி.சகாதேவராஜா)

 அம்பாறை மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தினால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் நேற்று(01) திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டன.

காரைதீவு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் ஜிபி. ஜயரத்ன தலைமையிலான பொலீஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து இந்த நிவாரணப் பொருட்களை மிகவும் துரிதமாக சேகரித்தனர்.

காரைதீவு போலீஸ் பிரிவில் வசிக்கும் ஏ.சிவகுமார்( லண்டன்) கே.சந்திரகாந்தன், எம்.காண்டீபன், கே.நமச்சிவாயம், எம்.நௌசார் ஆகியோர் வழங்கிய இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியில் இவ் உலருணவு நிவாரண பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் பதில் பொலீஸ் அதிகாரி , உதவி பொலீஸ் அத்தியட்சகர் எம்பிஜி.சம்பத்குமார விக்ரம் ரத்ன மற்றும் அக்கரைப்பற்று பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.தந்தநாராயண ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

இவ் உலருணவு நிவாரண பொருட்கள் நேற்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் ஊடாக அகதி முகாம்களில் வசிக்கும் அந்த மக்களின் கரங்களில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டன.