மட்டக்களப்பில் களைகட்டிய பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின்  குறிஞ்சிச்சாரல் தமிழுணர்வுப் பெருவிழா

( வி,ரி,சகாதேவராஜா)

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினது  குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது   நெய்தல் காற்று நெகிழ்ந்தாடும் மட்டுமாநகர் தன்னில் 16.11.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழ சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தில்  மாலை 02.30 மணியளவில் இடம்பெற்றது. 

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரை முதற் பெருந்தலைவராகக் கொண்டு  99 வருடங்களைக் கடந்து 100 ஆவது வருடத்தை நோக்கி வீறு நடையிடும் தொன்மையும் பெருமையும் மிக்கதோர் மாபெரும் சங்கத்தின்  தமிழுணர்வுப் பெருவிழா 

மேற்குறித்த நிகழ்வானது பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத் தலைவர்  மதுமிதனின் தலைமையிலும்  பெருந்தலைவர் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்  மற்றும் பெரும்பொருளாளர் கலாநிதி .எஸ். பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலிலும் நடந்தேறியது. 

நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடகப் பெருந்தகை  பேராசிரியர். சி. மெளனகுரு   தன்னுடைய கருத்துரைகளை வழங்கியதுடன் சிறப்பு விருந்தினர்களாக  

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தின்  இயக்குனர் பேராசிரியர்  புளொரன்ஸ் கெனடி அம்மையார், கலைப்பீட நுண்கலைத்துறை,  துறைத்தலைவர்  திருமதி துஷ்யந்தி சத்தியஜித் அம்மையார்  ஆகியவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். 

தமிழில் செழும்பணியாற்றிய ஆளுமைகளுக்கு வழங்கி கெளரவிக்கப்படும் சங்கச்சான்றோர் விருதானது  எழுத்தாளர்  உமா வரதராஜனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

மேலும்  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இன்னியம் இசைத்து வரவேற்றிட  தமிழர்களின்  தனித்துவமான வெற்றிலை வழங்கி வரவேற்கும் வழக்கத்துடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர் .

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல்  மற்றும் வரவேற்புரை மற்றும் தலைமையுரையோடு  பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் வரவேற்பு நடனத்தினை வழங்கியிருந்தனர்.  

தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின்  இறையிசைப் பாடல்கள் இடம்பெற்றது. 

பேராதனைப்பல்கலைக்கழக  தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி  ஆன் யாழினி சதீஸ்வரனது நெறிப்படுத்துகையில் பெண்ணியம் செழித்திடும் பிச்சி நாடகமும் மேடையேற்றப்பட்டது. 

அடுத்து  ”  எங்கட கதை ” எனும் தலைப்பில்  பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் வில்லுப்பாட்டானது மேடையேற்றப்பட்டது. 

மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தின் கணினி விஞ்ஞானத்துறை துறைத்தலைவர் கலாநிதி தயாசிவம்  உதயசங்கர்  மக்கள் மன்றத்தினை தலைமை தாங்கி நடுவு வகித்திட்டு நற்பணியாற்றினார். 

இன்றைய இளைஞர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் எதைஅடிப்படையாக கொண்டது  எனும் தொனிப்பொருளில் மக்கள் மன்றமானது அமைந்திருந்தது. 

அரசியற் பங்களிப்புச் சார்ந்தது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறை மாணவன் ஜெயபாலன் தவேதன் 

ஆளுமைத்திறன் சார்ந்தது என மொறட்டுவைப் பல்கலைக்கழ  பொறியியற்பீட மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன் 

சமூகப் பொறுப்புணர்வின்மை சார்ந்தது என கிழக்குப்பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி அபிராமி நகுலகுமார் 

புலம்பெயர் மோகம் சார்ந்தது என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக  விலங்கு விஞ்ஞான மற்றும்  ஏற்றுமதி விவசாயப்பீட மாணவன் லங்கேஸ்வரன் கிருஷன்  ஆகியோர் தத்தம் வாதங்களால் சபையினை உயிர்ப்பித்தனர் 

தொடர்ந்து  முறை காக்கும் முடி என்ற நடனத்தினை பேராதனைப்பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கினர் 

அடுத்து  சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்  திருமதி தாக்க்ஷாயினி பரமதேவனின் நெறியாள்கையில்  மட்டுமண் வாசம் மாறாத ஒய்யார ஒயிலாட்டமானது மேடையேற்றப்பட்டது. 

 மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியின் அஷ்ட லட்சுமி நாட்டியநாடகமானது அவையின் கண்களை கட்டிப்போட்டு அரங்கத்தினை நிறைத்த  

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க . மோகனதாஸ்  நெறியாள்கையில்   ” அகிலத்தின் திறலே தமிழணங்கு ”  என்ற தலைப்பில் மட்டுநகரின் தனிச்சிறப்புடைய கூத்துக்கலையானது மேடையேற்றப்பட்டது.   

இறுதி நிகழ்வாக  பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் திரையிசைப் பாடல்களோடு  குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது இனிதே நடந்தேறியது.   

You missed