இரு சமூகங்களுக்கிடையே பாரிய பிளவு, ஏற்பட முன் தடுத்து நிறுத்த அதிகாரிகள், மத தலைவர்கள், சமய நிறுவனங்கள் சமுக மட்ட அமைப்புகள் விரைந்து செயற்பட வேண்டும்.
துறைநீலாவணை பிரதான வீதியில் தொடரும் குப்பை கொட்டும் அநாகரிக நடவடிக்கையினால் துறைநீலாவணை மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆத்திரமூட்டப்படுகின்றனர்..
துறைநீலாவணைகிராமத்தின் முகப்பில் உள்ள அயல்கிராமத்தை சேர்ந்தவர்களாலே இந்த குப்பை கொட்டும் செயற்பாடு நீண்டகாலமாக முன்னெடுக்கப்படுகிறது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான பாதையிலிருந்து துறைநீலாவணை கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியில் இருமருங்கிலும் மாட்டிறைச்சி, கோழிஇறைச்சி விற்பனை கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகள் வீசப்படுகிறது.
துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பைகள் கொட்டப்படுவதால், பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்..
தூர்நாற்றம் வீசுதல், கழிவுகளை உண்ணவரும் நாய்களினால் அச்சுறுத்தல், முதலைகளின் நடமாட்டம் வீதியில் பயணிக்கும் பயணிகள் மீது காகங்களினால் தூக்கி வீசப்படு கழிவுகள் இவ்வாறு பல அசெகரியங்களை துறைநீலாவணை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த மோசமான சுற்றுச்சூழலை பாதிப்படையச்செய்யும் அருவருக்கத்தக்க நாகரீகமற்ற செயற்பாடு தொடர்பாக, ஊர்வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் கவலை தெரிவிக்கின்றனர்.

குப்பை வீசுவது ஒருசில பண்பற்ற, மனச்சாட்சி மனிதநேயமற்ற சமூகவிரோதிகளின் செயற்பாடு என்றால்? இதனை தடுத்து நிறுத்த குறித்த சமூகம், சமய நிறுவனங்கள் முன்வரவில்லை, அதேபோன்று அதிகாரிகளும் முன்வரவில்லை என்றால் இவர்களின் மனோநிலை எத்தகையது என்பதும் கேள்விக்குரியதே.
துறைநீலாவணை கிராமம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே அமைந்துள்ள எல்லைக்கிராமம்.
மட்டு வாவியினால் சூழப்பட்ட கிராமம், நீர் நிலைகளுக்கு நடுவே பசுமை நிறைந்த வயல் வெளிகளை ஊடறுத்து செல்லும் அழகு நிறைந்த வீதி, வீதியின் இருமருங்கும் பார்ப்போரை பூரிக்க செய்யும் காட்சிகள் நிறைந்த ரம்மியமிக்க நீர்நிலைகள் கொண்ட சூழல்
இவ்வாறான வீதியில் விலங்கு கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தமது வீட்டு கொண்டாட்டங்களின்போது வெளியேற்றும் கழிவுகள் குப்பைகள் என்பவற்றை இரவு நேரத்தில் முச்சக்கரவண்டி, கார், சிறியரக டிப்பர், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனத்தில் பயணிகள் போன்று பாசாங்கு செய்து வந்து வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.

இங்கு மிகவும் கேவலமான அருவருக்கத்தக்க விடயமொன்று என்னவென்றால் பாதுகாப்பாகவும், மறைமுகமாகவும் பக்குவமாகவும் அகற்றப்படவேண்டி பெண்களின் மாதவிடாய் கால கழிவுகளையும் கொண்டுவந்து கொட்டிச்செல்கின்றனர். பக்குவமான கன்னியமிக்க யாருமே இவ்வாறு தமது கழிவுகளை கண்டவாறு வீச மாட்டார்கள்.
இவ்வாறு வீசப்படும் குப்பைகளினால் 3 Km தூரம் கொண்ட பிரதான வீதியின் சுமார் 1Km தூரம் அசுத்தமாக காட்சியளிக்கிறது.
மேலும் துறைநீலாவணை பொது வீதி மருங்குகளின் அழகை இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க மாலை நேரங்களில் இதே அயல் கிராமங்களில் இருந்து குடும்பமாக அதிகமானோர் வருகின்றனர். வருவோர் அவர்களே கொண்டு வந்து கொட்டிய அதே குப்பை அசுத்தத்தை தூர்நாற்றத்தையுமே கண்டுகளித்தும் சுவாசித்தும் செல்கின்றனர்.
பிரதான வீதியின் இரு மருங்கிலும் குப்பை கொட்டப்படுதல் தொடர்பாக பத்திரிகை, வானொலி, வாயிலாகவும் சமூக ஊடகங்களிலும் பரவலாக இன்றுவரை தொடர்ச்சியாக வெளிக்கொணரப்பட்டு வருகின்றன, மாற்றம் ஏற்படவில்லை. மாறாக பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த பிரச்சினையை வெளிக்கொணர்ந்தோர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு இனவாதிகளாக முத்திரைகுத்தப்பட்டனர்.
பல சந்தர்ப்பங்களில் குப்பைகளை கொட்டியவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, அவர்களையே குப்பைகளை அள்ளிச் செல்ல வைத்து எச்சரித்து அனுப்பிய சம்பவங்களும் நடந்திருக்கிறது.

குப்பை வீசுவதை தடுக்க, காவல்துறையினரின் உதவியை பொதுமக்கள் நாடியுமுள்ளனர்.
இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை இந்த வீதியில் கொட்டப்படும் கழிவுகளை கிராம பொது மக்களுடன் இணைந்து அகற்றுவதோடு வீதியையும் அடிக்கடி சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்வது வழக்கம்.
பிரதேச சபையினால் இந்த இடத்தில் குப்பை கொட்ட வேண்டாம் என விழிப்புணர்வு எச்சரிக்கை பதாதைகளை காட்சிப்படுத்தியும் பதாதைக்கு அருகிலே குப்பையை கொட்டி சென்றுவிடுகின்றனர்.
துறைநீலாவணை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வரும் கிராமம் என்ற போதிலும் இந்த குறித்த வீதி அம்பாறை மாவட்ட நிருவாகத்துக்குட்பட்டது.
துறைநீலாவணை பிரதான வீதியை அண்மித்த கிராமங்களாக நீலாவனை மருதமுனை கிராமங்கள் உள்ளமையும் கவனிக்கத்தக்கது.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாநாகரசபை முதல்வர் நேரடியாக குப்பை கொட்டும் இடங்களை அவதானித்துவிட்டு கல்முனை மாநகர முதல்வரை தொடர்புகொண்டு இந்த குப்பை கொட்டும் செயற்பாட்டினை தடுக்க முடியாதா? நடவடிக்கை எடுப்பீர்களா என வினாவினர்?
நாங்கள் தினமும் கழிவகற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம், ஆனாலும் சமூகத்துக்கு உதவாத சில விசமிகள் இதனை செய்கிறார்கள் என்றார்.
துறைநீலாவணை பொதுமக்கள் பிரதேசசபைக்கு விடுத்த கோரிக்கையின் பயனாக தெருவிளக்குகள் பொருத்தப்பட்டது, குப்பைகொட்டும் நாசகாரர்களினல் அந்த தெருவிளக்குகள் சேதமாக்கப்படுவதும் தொடராக இடம்பெற்று வருகிறது.
நீண்டகாலமாக இதனை தடுக்க பாடுபட்டுவரும் மக்கள் சலிப்படைந்து Cct பொருத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உண்மையில் துறைநீலாவணை பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் சமூகபொறுப்பும் பொறுமையும் உள்ளவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள் ஏனென்றால் குப்பை கொட்டும் நபர்களை குப்பை கொட்டும் போது வாகனங்களுடன் கையும்மெய்யுமாக பிடித்து கொட்டிய குப்பையை அள்ளிச்செல்லவே செய்தனர். அவர்களுடன் வன்முறையில் ஈடுபடவோ முரண்பாட்டை வளர்த்துக்கொள்ளவோ ஒருபோதும் முனையவில்லை. இந்த நிலை தொடரும் போது இளைஞர்கள் பொறுமையிழக்கும் நிலையில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து சமூகத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும்
இன்று துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பை கொட்டப்படுவது பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது, இது தொடருமானால்
இது எதிர்காலத்தில் இரு சமூகங்களுக்கிடையே பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்துமளவிற்கு மாறவும் கூடும்.
எனவே துறைநீலாவணை மக்களின் மனங்களை ரணமாக்கும் தொடர் நடவடிக்கையை தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொது அமைப்புக்கள் முன் வரவேண்டுமென்பது துறைநீலாவணை பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கணேசமூர்த்தி சசீந்திரன்
மாணவன்
ஊடகமும் சிறுபான்மையினர் உரிமைகளும் கற்கை
SDJF & MIM