பேராசிரியர் வரகுணம் மருத்துவத்துறையின் ஒரு சரித்திரம்!

 கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன்  புகழாரம்!

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவ பீடத்தின்  ஆணிவேராக திகழ்ந்த மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் மருத்துவ உலகில் ஒரு சரித்திரம். இன்று அந்த பெருமகானுக்கு சிலை நிறுவியதில் எமது பல்கலைக்கழகம் பெருமை அடைகின்றது.

இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவபீட முன்னோடியுமான மறைந்த  பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும்  சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதியின் அலுவலகம் மற்றும் கலந்துரையாடல் மண்டபமும் நேற்று  (1) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன. அந்த விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக ஆயிரம் இருக்கைகள் கொண்ட பிரமாண்டமான ஒன்றுகூடல் மண்டபத்தின் முன்னால் நிறுவப்பட்ட பேராசிரியர் வரகுணத்தின் அழகான வெண்ணிற பளிங்கு திருவருவச்சிலையை  உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார் .

இந்த விழா கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையிலே சிறப்பாக நடைபெற்றது. 

அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட உபவேந்தர் பேராசிரியர்  பிரதீபன் மேலும் பேசுகையில் ..

பேராதனை பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் மருத்துவக்கல்வியை அறிமுகம் செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர் வரகுணம் அவர்கள்,  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வேந்தராக இருந்த காலத்தில் (2004-2009) இந்த சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தை நிறுவுவதில் ஆணிவேராக திகழ்ந்தார் .

அவர் ஒரு சரித்திரம். அவர் ஒரு கொடை வள்ளல். கிழக்கின் பேராளுமைகளுள் ஒருவரான பேராசிரியர் வரகுணம் அவர்களுக்கு எமது பல்கலைக்கழகம் சிலை நிறுவியதில் பெருமை அடைகின்றோம் . என்றார்.

அங்கு பேராசிரியர் பற்றி மருத்துக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டாக்டர் என்.ரோஷினி,  பல்கலைக்கழக முன்னாள் கவுன்சில் உறுப்பினரும், கல்விப் பணிப்பாளருமான எஸ். எஸ். மனோகரன், பேராசிரியரின் மனைவி திருமதி.வரகுணம், சிலையை அன்பளிப்பு செய்த காரைதீவு அருளானந்தம் சமூக சேவை நிறுவனத்தின் இணைப்பாளராக கலந்து கொண்ட ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி சகாதேவராஜா  ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

அங்கு வித்தகர் வி.ரி. சகாதேவராஜா உரையாற்றுகையில்..

சுனாமியால் காரைதீவு வைத்தியசாலை முற்றாக கபளீகரம் செய்யப்பட்ட பொழுது அதனை மீண்டும் அமைக்க உரிய காணியில்லாமல் திண்டாடி இருந்தது.

அப்பொழுது பல கோடி ரூபாய் பெறுமதியான தனது சொந்தக்காணியை காரைதீவு மக்களுக்காக இலவசமாக வழங்கியவர் பேராசிரியர் வரகுணம் அவர்கள். அவரை என்றும் காரைதீவு மக்கள் நினைவு கூறுகின்றார்கள். அதன் ஒரு சிறு நன்றிக்கடனே இந்த சிலை. இதனை கனடாவில் வாழும் சிறந்த சமூக செயற்பாட்டாளர் டாக்டர் அருளானந்தம் வரதராஜன் அவர்கள் முன்வந்து அவரது தாய் தகப்பன் பேரில் அமைக்கப்பட்ட  அருளானந்தம் சமூக சேவை நிறுவனத்தினால்  வழங்கி வைத்தமை பாராட்டுக்குரியது. அதேவேளை அந்த சிலையை காரைதீவின் மைந்தன் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர்  பேராசிரியர் பிரதீபன் திறந்து வைத்தமை மேலும் பெருமையை அளிக்கின்றது. இறையருளால் இதனை இணைத்த பீடாதிபதி பேராசிரியர் சதானந்தன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். என்றார்.

விழாவில், சிலையை செய்த சிற்பி  சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள்  நிறுவக விரிவுரையாளர் எம்.சிறிகாந்தன்  பாராட்டிக் கௌரிவிக்கப்பட்டார்.

மறைந்த பேராசிரியர் வரகுணத்தின் சிலையுடன் கூடிய நினைவுச் சின்னத்தை அவர் அங்கு கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி வைத்தார். 

பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகீரதனும் கலந்து கொண்ட இவ்விழாவில்   சிரேஸ்ட உதவிப் பதிவாளர் எம் .சதீஷ் நன்றியுரையாற்றினார்.

விழாவில் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியலாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.