அம்பாறை பிரதேசங்களில் மங்குஸ்தான் ரம்புட்டான் பழத்தின் விற்பனை அமோகம்
பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக பிரதான வீதியோரங்களில் உள்ள கடைகளில் வெப்பத்தை தணிப்பதற்காக பழங்களை பொது மக்கள் அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர்
இதனால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் அரிய வகை மூலிகை மருத்துவ குணம் கொண்ட பழங்களின் விற்பனை ஆரம்பித்துள்ளது.
வருடந்தோரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் பருவ காலங்களில் அரிய வகை பழவகைகளான ரம்புட்டான் துரியன் கொய்யா மற்றும் மங்குஸ்தான் போன்றவைகள் விற்பனை செய்யப்படுவதுடன் இவ்வகை பழங்களின் விற்பனை மும்முரமாக இடம்பெறுகின்றதை காண முடிகின்றது.
இவை தவிர ஆஸ்திரேலியா தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பழ வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில இடங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இப்பழங்களை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சுவைக்கும் பழமாக உள்ளது. மிருதுவான முட்களுடன் உருண்டை வடிவில் ரப்பர் பொம்மை போல் காணப்படும் இந்த பழத்தை விரல்களால் அழுத்தி உடைத்தால் உள்ளே வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிறத்துடன் நுங்கு போன்று வழுவழுப்பாக இருக்கும் சுளையை விரும்பி சுவைக்கலாம்.சில பழங்கள் சிறிது புளிப்புடன் அதிக இனிப்பாக இருக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் செப்டம்பர் மாத இறுதிவரையிலான காலத்தில் ரம்புட்டான் சீசன் இருக்கும் என்பதால் தற்போது அம்மாவட்டத்தில் ரம்புட்டான் பழங்கள் கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு நாவிதன்வெளி , அக்கரைப்பற்று , ஒலுவில் , நிந்தவூர் , அட்டாளைச்சேனை , சம்மாந்துறை , போன்ற பிரதேசங்களில் தற்போது ரம்புட்டான் பழங்கள் கிலோவிற்கு 250 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ரூபா 100 க்கு 18 மதல் 20 வரை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.மேலும் மங்குஸ்தானும் ஒரு கிலோ 300 முதல் 350 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.சீசன் அதிகமாக உள்ளதால் விலை குறைந்து கொண்டே வருகிறது.மல்வானை குருநாகல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இம்மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் இந்த ரம்புட்டான் பழங்களை மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.கடந்த ஆண்டை விடவும் இம்முறை நாட்டில் இந்த ஆண்டு மழை குறைவு என்பதால் விளைச்சல் அதிகமாக உள்ளது.இதன்காரணமாக விலை குறையவில்லை என வியாபாரி ஒருவர் இவ்வாறு கூறினார்.
இதே வேளை குறித்த பழ வகைகளில் ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்கின்றனர். மேலும் நாட்டில் ரம்புட்டான் பழங்களினால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை மாத காலத்தில் அதிகளவில் ரம்புட்டான் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் ரம்புட்டான் பழங்களை அறுவடை செய்கின்றனர்.
இதன் காரணமாக ரம்புட்டான் தோட்டாங்களை சுற்றி மின்சார வேலிகள் பொருத்தப்பட்டிருப்பதால் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றனர்இ பலர் மின்சாரம் தாக்கி காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.ரம்புட்டான் விதைகள் தொண்டையில் சிக்கி சிறுவர்களும் உயிரிழக்கின்றனர்.
எனவே சிறுவர்களுக்கு ரம்புட்டான் பழங்களை சாப்பிட கொடுக்கும் போது பெற்றோர் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











