மட்டக்களப்பில் மனிதநேயப் பணி: வெளியூர் பயணிகளின் தாகம் தணிக்கும் சுத்தமான குடிநீர் வசதி
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அமைந்துள்ள சந்தி, வெளியூர் பயணிகளின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. இந்தச் சந்தியை நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். நீண்ட தூரப் பயணங்களால் களைப்புடன் வரும் இவர்களின் தாகத்தைத் தணிக்கும் உயரிய நோக்கத்துடன், பணிமனையின் நுழைவாயில் அருகே சுத்தமான குடிநீர் வசதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
26.07.2025 ஆம் திகதி சனிக்கிழமையன்று, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், Dr. கே. முருகானந்தம் அவர்களினால் இப்புதிய குடிநீர் வசதியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த மனிதநேயமிக்க முன்முயற்சியானது, ஓய்வுபெற்ற மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. கே. முருகானந்தம் அவர்கள், தனது பெற்றோர் நினைவாக வழங்கிய நன்கொடையின் மூலம் நிறுவப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், Dr. கே. முருகானந்தம் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்படப் பிராந்திய வைத்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப் பணி, மக்களின் நலனில் அக்கறை கொண்டு மேற்கொள்ளப்படும் ஓர் அரிய சேவையாகும். இதன் மூலம், தாகத்துடன் வரும் வெளியூர் பயணிகள் புத்துணர்ச்சி பெறுவார்கள் எனப் பணிமனை நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.










