18.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவரின் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், வைத்தியசாலை நிர்வாகம் வருத்தத்துடன் இவ் அறிக்கையை வெளியிடுகிறது.

அன்று மதியம் 12 மணியளவில், கடும் குருதிப்போக்குடன் (abruptio placentae) குறித்த தாய் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்குச் சிகிச்சையளித்த எமது வைத்தியக் குழுவினர், வயிற்றில் இருந்த குழந்தையின் இதயத்துடிப்பு இல்லாதிருந்ததை கண்டிறிந்தனர். தாய்க்கு ஏற்பட்டிருக்கும் குருதிப்பெருக்குடன் தொடர்புடைய அவசர நிலையினை கருத்தில் கொண்டு, எமது வைத்தியர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணருடன் தொடர்புகொண்டு, மேலதிக சிகிச்சைக்காக மதியம் 12.30 அளவில் அம்புலன்ஸ் மூலம் தாயை களுவாஞ்சிகுடிக்கு அனுப்பிவைத்தார்.
களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனையின் பின்னர், குழந்தை வயிற்றில் இறந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தாய்க்குத் தேவையான இரத்தம் அரிதான O negative வகை என்பதாலும் தாயின் கோரிக்கைக்கு அமைவாகவும் அவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

ஆரம்ப விசாரணைகள் :
ஆரம்ப விசாரணையில், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த குறித்த தாய், வீட்டில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்ட பின்னர் குழந்தையின் துடிப்பிலும் சந்தேகம் ஏற்பட மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன், அவர் தொடர்ச்சியாக கல்முனை வைத்தியசாலையிலேயே தனது கிளினிக் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார். மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே குழந்தை இதயத்துடிப்பு அற்ற நிலை கண்டறியப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, எமது வைத்தியர் உரிய நிபுணருடன் உடனடியாகத் தொடர்புகொண்டு, தாயை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு விரைவாக மாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அம்புலன்ஸ் சேவை :
மண்டூர் வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டியானது, மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாலுக்காக மட்டக்களப்பு நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டிருந்தது. மாற்றீடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பழுகாமம் பிரதேச வைத்தியலையின் அம்புலன்ஸ் வண்டி மூலம் நோயாளி உரிய நேரத்தில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பதையும் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்கள் :
இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு பற்றி சமூக வலைத்தளங்களில் பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன என்பதை எங்கள் நிர்வாகம் கவனித்துள்ளது. உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற ஒரு சோகமான நேரத்தில், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மன உளைச்சல்களையும் தேவையில்லாத குழப்பத்தையும் வைத்தியசாலை பணியாளர்களுக்கு ஏற்படுத்தும்.

அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர் உட்பட சுகாதார பணியாளர்களின் பற்றாக்குறை காணப்படும் நிலையில், இடம்பெறும் சம்பவங்களின் உண்மைத்தன்மை அறிந்துகொள்ள முற்படாமல், கருத்துக்களை தெரிவிப்பதானது, குறிப்பாக நகரில் இருந்து தொலை தூரத்தில் அமைந்திருக்கும் மண்டூர் போன்ற வைத்தியசாலைகளின் சேவையினை பாதிக்கும் என்பதோடு எதிர்காலத்தில் வைத்தியசாலையின் தரம் பாதிக்கப்பட கூடிய சந்தர்ப்பங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

ஆகவே, தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் நம்பகமான தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்வதோடு மண்டடூர் வைத்திய சாலையின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்.

நன்றி