( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் இன்று (7) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குவதால் இன்று முதல் ஐம்பது பேர் கொண்ட தொண்டர் படையணி  களத்தில் இயங்கும்.

அவர்களுக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதேச செயலாளர் ஆலய தலைவர் மூவரும் ஒப்பமிட்ட அடையாள அட்டை வழங்கப்படும். 

இது தொடர்பான தீர்மானம்   (5) சனிக்கிழமை ஆலய மண்டபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தில்  

நிறைவேற்றப்பட்டது.

திருக்கோவில் ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை திருவிழா சம்பந்தமான பஞ்சாயத்து கூட்டம் ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில்  ஆலய மண்டபத்தில் நடைபெற்றது .

அங்கு தொண்டர் படை இளைஞர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்பட்டது.

 அக்கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்,

 திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,  ஜி.பத்மகுமார, ஆலய நிருவாக சபையினர்,மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். 

 அதில், பூசை உபயகாரர்கள் பூசைப்பொருட்கள் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளும்,   அடியவர்களின் பாதுகாப்பு,  வீதி போக்குவரத்து, வாகனத்தரிப்பிடம்,  கடை  வழங்குதல், பத்தர்கள் பிதிர்கடன் தீர்த்தல், அன்னதான சமையல்  எனப்பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு  தீர்க்கமான முறையில் முடிவுகள் எட்டப்பட்டன.

உள்வீதி வெளிவீதி பாதுகாப்பு தொண்டர் படையணி வீதியில் பொலிஸ் பாதுகாப்பு நடைமுறையிலிருக்கும்.