பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்!

வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித் 

(  வி.ரி.சகாதேவராஜா)

கடந்த மூன்று வருட காலமாக லாகுகலை பிரதேச செயலகத்தின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை  முருகன் ஆலய நிர்வாகம்,  இனிமேல் பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் செயற்படும் .

இவ்வாறு கிழக்கின் பிரபல சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் தெரிவித்தார்.

உகந்தமலை முருகன் ஆலயம் தொடர்பாக பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் நடைமுறையில் உள்ளன .

அவற்றில் ஒரு வழக்கு கடந்த வாரம் பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற போது ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்மானம் நீதிபதியால் கட்டளையிடப் பட்டிருக்கிறது.

அந்த வழக்குகளில் ஆலயம் சார்பில் சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் ஆஜராகி வருகிறார்.

 நீதிமன்ற தீர்மானம் தொடர்பாக சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் கூறுகையில்..

உகந்தமலை முருகன் ஆலயம் தொடர்பாக மூன்று வழக்குகள் பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் சமகாலத்தில் சென்று கொண்டிருக்கின்றன. அதுக்கு நான் ஆஜராகி வருகின்றேன் .

 ஆலய நிர்வாக செயற்பாடுகள்  மீண்டும் வண்ணக்கர் தலைமையில் கொண்டு வர வேண்டும் என்ற ரீதியிலே தொடரப்பட்ட வழக்கு கடந்த வாரம்   நீதிமன்றிலே எடுத்து கொள்ளப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் ஏற்ற நீதிபதி இரு சாராரும் இணக்கப்பாட்டிற்கு வந்தமையால் பொதுவான தீர்மானத்தை வழங்கியிருந்தார். இரு சாராரினதும் இணக்கப்பாட்டினால்  ஆலய நிர்வாகம் இனிமேல் பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் இயங்கும் என்றும் நிதி செயல்பாடுகள் பிரதேச செயலாளர் கண்காணிப்பில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார் .

அதன் படி ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா இனிமேல் பாரம்பரிய சம்பிரதாயங்களை கடைப்பிடித்து ஆலயத்தை வழிநடாத்த உள்ளார்.

 புதிய நிர்வாகம் மிக விரைவில் தெரிவு செய்யப்படும் என்று தெரிகிறது.