கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் எம்.பி நடவடிக்கை
பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென கிழக்கு ஆளுநரிடம் நேரடியாக வலியுறுத்தினார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (27) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
தூரப் பிரதேசங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியைகள் எதிர்கொள்ளும் மொழி மற்றும் பிரயாண அசௌகரியங்களை கிழக்கு மாகாண ஆளுநருக்கு விரிவாக இதன்போது எடுத்துரைத்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய ஆளுநர், இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர் எம்.எஸ்.உதுமாலெப்பை,மஞ்சுல சுகத் ரத்நாயக, பிரியந்த விஜயரத்ன ஏ.எம்.எம்.ரத்வத்த உட்பட மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.மனாஸிர் உட்பட பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் கிழக்கு மாகாண சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் மற்றும் முப்படைகளின் பிரதானிகளும் கலந்து கொண்டனர்.இங்கு பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.