வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அம்பாறையிலும் போராட்டம்
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் செவ்வாய்க்கிழமை(26) அம்பாறை மாவட்டம் திருக்கொவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த அமைதி வழி போராட்டமானது இலங்கை அரசிடம் நீதி கோரிய போதும் தீர்வுகள் கிடைக்காத நிலையில் தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதிபன்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? மனிதம் பாதுகாக்கப்படுகிறதா? அரசே காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா? ஆகிய பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெற்றதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.




