மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகருக்கு காரேறுமூதூரிலிருந்து ஓர் வரலாற்று வாழ்த்து மடல்!

இன்று(17) சனிக்கிழமை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கருங்கல் சிலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது.

அதனையொட்டி சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணிலிருந்து ஒரு வாழ்த்து மடல் 

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது வயதில் முதலாவது கருங்கல் சிலை  இன்று மட்டுமாநகரின் கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகின்ற இன்றைய நாளில் சுவாமி பிறந்த காரைதீவு மண்மாதா பெரும் மகிழ்ச்சி அடைகிறாள். 

அதற்காக தங்களை அர்ப்பணித்து உழைத்த மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த நூற்றாண்டு விழாச் சபையினர் அதன் தலைவர் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் உள்ளிட்ட குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

இவ் வேளையில் அதற்காக முழுமூச்சுடன் இயங்கி இந்தியாவிற்கு பல தடவைகள் சென்று தனது நிதி நேரம் சிரமம் அனைத்தையும் பொருட்படுத்தாமல் சுவாமிகளின் கருங்கல் சிலையை அமைத்து மட்டக்களப்பிற்கு கொண்டு வந்த சிலையமைப்புக்குழுத் தலைவரும் பிரபல தொழிலதிபருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராஜா அவர்களை காரைதீவு மண் நன்றியோடு பார்க்கிறது. பாராட்டுகிறது.

இதற்கு உதவிய 33 பரோபகாரிகளும் பாராட்டுக்குரியவர்கள்.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் 1892.03.27ஆம் திகதி இவ் அவனியில் அவதரித்து 1947.07.19ஆம் திகதி மகா சமாதி அடைந்தார். 

அவர் மகாசமாதியடைந்த பின்னர்,  1969 ஆம் ஆண்டில் தான் அவர் பிறந்த காரைதீவு மண்ணில்  அடிகளாருக்கு முதலாவது சிலை விபுலானந்த நூலகத்தின் முன்னால் நிறுவப்பட்டது. அதாவது அவர் மகா சமாதி அடைந்து 22 வருடங்களின் பின்னர் 1969.10.08 ஆம் தேதி நிறுவப்பட்டது .அச் சிலை எனது மைத்துனர் முன்னாள் காரைதீவு கிராமாட்சிமன்ற  அக்கிராசனர் டாக்டர் மா. பரசுராமன் தலைமையில் இந்தியா வின் தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால்,  மட்டக்களப்பு மக்கள் அதனை ஒருபடி விஞ்சி விட்டார்கள் .

அதாவது உலகின் முதல் தமிழ் பேராசிரியருக்கு உலகில்  முதலாவது சிலை அவர் சமாதி அடைந்து 16 வருடங்களின் பின் அதாவது 1963.01.14ஆம்  திகதி மட்டக்களப்பு தமிழ்க் கலா மன்றத்தினர் மட்டக்களப்பு நீதிமன்ற முன்றலில் சிலை நிறுவி சேவைகளுக்கு நன்றி கூறி கௌரவித்தனர். இது ஒரு வரலாறு.

அச்சமயம் சுவாமியின் பிறந்தபதியாம்  காரேறு மூதூர் பெருங்குடி மக்கள் மனமுவந்து ஆசிச் செய்தியை புது முறையில் அனுப்ப முன் வந்தது .அந்த ஆசிச்செய்தியை வெள்ளிப் பேழையில் இட்டு 

அஞ்சலோட்ட வீரர் ஒருவர் காரைதீவிலிருந்து 27 மைல் தொலைவில் உள்ள மட்டக்களப்பிற்கு  ஓட்டத்தில் எடுத்துச் சென்று  சமர்ப்பித்ததும் ஒரு வரலாறு.

அவ்வமயம் அதனை பார்த்திருந்த எனது மைத்துனர் சைவப் புலவர் பண்டிதர் வீ.ரி. செல்லத்துரை அவர்கள் இவ்வாறு கவி வடிக்கிறார் .

“பொற்கோட்டிமயமிசை பொலிந்திலங்கு பரிதியென புலமையாண்டு சொற்கூட்டும் சுருதியிலே யாழ் மணக்கச் சுவை மடுத்த தூயோன் செம்மல் நட்பூட்டும் நற்பணிக்கு நவில் நன்றிச்சிலை வடித்து நடுகல் நாட்ட முற்கூட்டி வந்த கலா மன்றத்தார் தமிழார்வம் முழங்க மாதோ” 

சைவமும் தமிழும் வளர்த்த வித்தகனுக்கு நன்றி கூறும் சிலை நிறுவிய அம் மகத்தான பணியை செய்த மட்டக்களப்பு தமிழ்க் கலா மன்றத்தினருக்கு,  காரைதீவு மண்ணில் இருந்து அவர் வடித்த நன்றியுடன் கூடிய வாழ்த்துப்பா அது.

1999 ஆம் ஆண்டு காரைதீவு சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தின் முன் புதிய சிலை நிறுவிய சமயம் என்னால் வெளியிடப்பட்ட “அடிகளார் நினைவாலய மலரில்” மட்டக்களப்பில் 1963 இல் நிறுவிய சிலை தொடர்பான பதிவுகள் இடப்பட்டன .அதன் நிழல்பிரதி இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

 உலகில் முதன் முதலில் இலங்கைத் தீவுக்கு வெளியே கடல் கடந்த நாடொன்றில் சுவாமிக்கு சிலை நிறுவிய பெருமை காரைதீவைச் சேர்ந்த உதயசூரியன் புகழ் நாகமணி குணரெத்தினம் அவர்களையே சாரும். அவர் கடந்த வருடம் அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில் அச் சிலையை நிறுவி வரலாறு படைத்தார். இதுவும் பதிவு செய்யப்பட வேண்டியதே.

சுவாமிகள்  இவ் வையகத்தில் அவதரித்து 133வருடங்களாகின்றது.அவர் மகாசமாதியடைந்து 77வருடங்களாகின்றன. ஆக வாழ்ந்த காலம் 55வருடங்கள்.

அவர் பிறந்து 133 வயதாகின்ற இவ் வேளையில் அதே மட்டக்களப்பு மக்கள் அதே அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலையை நிறுவுவது மற்றுமொரு வரலாறாகும்.

அதற்காக உழைத்த அத்தனை உள்ளங்களும் சாகா வரம் பெற்றவர்களாவர்.

அதற்கான வரலாற்று வாழ்த்தை சுவாமியின் மிகுந்த பற்றாளனான அடியேன்,  மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த நூற்றாண்டு விழா சபையினருக்கு  காரைதீவு மண் சார்பாக வரலாற்று வாழ்த்துக்களை தெரிவிப்பதில் இறும்பூதடைகின்றேன்.

இப்பாரியபணியை  தமிழ்  கூறும் நல் உலகம் உயிர்உள்ளவரை யாரும் மறக்க முடியாது.

சுவாமிகள் 

 பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, எழுத்தாளராக, திறனாய்வாளராக, பேச்சாளராக,ஒப்பியலாளராக, பத்திராதிபராக, புத்தகாசிரியனாக,  ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, முத்தமிழ் வித்தகராக பல வகிபாகங்களுடன் விளங்கியவர்.

அவர் போல் ஒரு தமிழறிஞர் பிறக்கவில்லை எனலாம். அவர் அகிலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

அவர் சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும் சைவத்திற்கும்  தமிழுக்குமாற்றிய சேவைகளும் அவரை என்றும் நினைவுகூரச் செய்வனவாகும்.

ஈழம் முதல் பனி இமயம்வரை கொடி கட்டிய இசைத்தமிழனான அடிகளாரின் முதலாவது கருங்கல் சிலை நிறுவிய ஞான்று உலகின் எட்டுத்திக்கிலும் அவர் புகழ்பரப்பி மேலும் கொண்டாடப்படவேண்டும் என்பதே எமது வேணவா.

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா.

முன்னாள் தலைவர் & இந்நாள் ஆலோசகர் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம். காரைதீவு

You missed