வடக்கு தமிழர்கள் என ஜனாதிபதி அழைப்பது தவறு வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் பிரச்சனை என்பதே சரி.!

பா.அரியதேத்திரன் மு.பா.உ

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்பதற்கே தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் உள்ளனரே அன்றி தனியாக வடக்கு மக்களின் பிரச்சனைக்கு மட்டுமல்ல என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் வடக்கு தமிழர்களின் பிரச்சனைக்கு அடுத்தவருடம் சுதந்திர தினத்திற்கு முன்னம் தீர்வு கிடைக்கும் எனவும் ஒருவாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகளையும் சந்திக்கவுள்ளதாக கூறிய கருத்து தொடர்பாக மேலும் கூறுகையில்.

தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வாக இருக்கலாம், அன்றாட பிரச்சனைகளாக இருக்கலாம், அபிவிருத்திகளாக இருக்கலாம், போதை பொருள்பாவனை விடயமாக இருக்கலாம் அனைத்து விடயங்களும் தனியே வடக்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சனைகள் இல்லை இது வடக்கு கிழக்கு முழுவதுக்குமான பிரச்சனைகள் என்பதை ஜனாதிபதி அவர்கள் உணர்ந்து கொண்டு அதனை தீர்பதற்கு முன்வரவேண்டும்.

கிழக்கில் எந்த பிரச்சனைகளும் இல்லை வடமகாணத்தில் மட்டுமே பிரச்சனைகள் என்ற மனநிலைகளில் இருந்து ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் முதலில் விடுபடவேண்டும்.

கடந்த 74, வருடங்களாக இணைந்த வடக்கு கிழக்கில் நிரந்தர சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வேண்டியே வடக்கு கிழக்கு முழுவதுமான அகிம்சை போராட்டங்களும், ஆயுத போராட்டங்களும், தற்போது இராஜதந்திர செயல்பாடுகளும் இடம்பெறுகின்றது. வடக்கை வேறாகவும், கிழக்கை வேறாகவும் பிரித்து எந்த ஒரு தமிழ்தேசிய கட்சிகளும் இதுவரை அரசியல் செய்யவில்லை இன்னும் செய்யப்போவதும் இல்லை இந்த உண்மையை விளங்கி ஜனாதிபதி ரணில் அவர்கள் தமது நடவடிக்கைகளை கையாளவேண்டும்.

தமிழ்தேசிய அரசியல் கட்சிசார்ந்த தலைவர்களும் இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் தனியே வடக்கு தமிழ்மக்களின் பிரச்சனைகளை மட்டும் கலந்துரையாடும் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைத்தால் அதில் கலந்துகொள்ளாமல் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ்மக்களின் பிரச்சனைகளை ஆராயும் கூட்டங்களுக்கு மட்டுமே தமிழ் தேசிய கட்சிகள் செல்லவேண்டும்.

தற்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை பெற வடக்கு தமிழர்கள் என்ற வட்டத்துக்குள் பிரச்சனைகளை முடக்கி சர்வதேசத்தை ஏமாற்ற எடுக்கும் நடவடிக்கைகளை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் மேலும் கூறினார்.