பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் இன நல்லிணக்கத்தோடும் நன்னெறி பண்புகளுடனும், சமூக வாஞ்சையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் வலியுறுத்தினார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும், ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கொண்டுவர இருக்கின்ற சட்ட வரைவு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்களிக்கும் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியர் விடுதியில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
“ஊடகத்துறை என்பது வெறும் செய்தி சேகரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஒரு உன்னதமான பணியாகும். எனவே, கிழக்கு ஊடகவியலாளர்கள் தங்களுக்குள் இருக்கும் இன, மத பேதங்களை மறந்து, சமூகப் பொறுப்புணர்வோடும் நட்புறவோடும் சகோதரத்துவ வாஞ்சையோடும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.”
எதிர்கால ஊடகத்துறையின் வளர்ச்சி மற்றும் தரம் குறித்துப் பேசிய கலாநிதி றியாத் ஏ. மஜீத், உயர்கல்வித் துறையில் ஊடகவியல் சார்ந்த மாற்றங்கள் நிகழ வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் ஊடகத்துறை சம்பந்தமான முறையான பட்டப்படிப்புகள் பல கல்லூரிகளில் ஆரம்பிக்கப்பட்டு, அவை பல்கலைக்கழகங்கள் ஊடாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் இதன் போது முன்வைத்தார்.
இவ்விடயம் குறித்து சசல ஊடக அமைப்புக்களும் ஒருமித்த கருத்தில் நாட்டின் கல்வி உயர்கல்வி அமைச்சருக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, சிலோன் மீடியா போரத்தின் ஏழாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் மயோன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தின் 40 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மயோன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தின் அனுசரணையில், கொழும்பு சென்று வருவதற்கான ஒரு வழிப் பாதைக்கான 50% தள்ளுபடி கிப்ட் வவுச்சர்கள் (Gift Vouchers) இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதில் சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







