சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் திருத்தம் செய்து, அதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தங்களின்படி, சர்க்கரை கலந்த திரவ உணவுப் பொட்டலங்களில் இடம்பெற வேண்டிய வண்ணக் குறியீடுகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 100 மில்லிலிட்டருக்கு 8.0 கிராமுக்கும் அதிகமான சர்க்கரை கொண்ட பானங்களுக்கு சிவப்பு, 2.5 முதல் 8.0 கிராம் வரையிலான சர்க்கரை கொண்ட பானங்களுக்கு ஆரஞ்சு, 2.5 கிராமுக்கும் குறைவான சர்க்கரை கொண்ட பானங்களுக்கு பச்சை நிறக் குறியீடு பயன்படுத்தப்பட வேண்டும்.

மேலும், கண்ணாடிப் பாட்டில்களில் இடப்பற்றாக்குறை காணப்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய மாற்று வண்ணக் குறியீட்டு சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் மூலம், பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவை நுகர்வோர் எளிதில் அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுவதுடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவித்தல், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் உணவுப் பொருட்களின் லேபிளிங் முறையை சர்வதேச தரங்களுக்கு ஏற்ப மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.