தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, பல்வேறு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கை மனுவொன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைச் சவால்கள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைக்கு பதிலாக தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

அத்துடன், இந்திய மற்றும் ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணுதல், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றன.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் மற்றும் சட்டத்தரணிகள் கனகரட்ணம் சுகாஷ், நடராஜர் காண்டீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.