நாளை (08) முதல் பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் பல்வேறு அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடியாகவும் இணைய வழியிலும் கூட்டங்கள் நடத்தப்படுவதால், பிரதேச செயலகங்களின் அன்றாட சேவைகள் பாதிக்கப்படுவதோடு, சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அரசு நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 27/2023 இன் படி, பொதுமக்கள் தினத்தில் அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் இருந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்நாளில் உத்தியோகபூர்வ கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நாளை முதல் திங்கட்கிழமைகளில் நடைபெறும் எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளாத தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.