நாவிதன்வெளியில் உலக பால் தினம் 2026 விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
உலக பால் தினம் 2026-ஐ முன்னிட்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் கீழ் “திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி” நாவிதன்வெளி பிரதேச செயலக முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.
நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் டாக்டர் (திருமதி) யாமினி மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முக்கிய நோக்கம், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தம் புதிய திரவப் பாலின் பயன்பாட்டை ஊக்குவித்தல், பாலின் ஊட்டச்சத்து பெறுமதி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்தல் மற்றும் உள்ளூர் பால்பண்ணையாளர்களை ஊக்குவித்தல் என்பனவாகும்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரத் திணைக்கள மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பல்வேறு அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு பால் வழங்கப்பட்டதுடன், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர் மற்றும் அனைத்து வயதினருக்கும் பாலின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், நாவிதன்வெளி விதாதா வள நிலையத்தில் உதவித் தாதியர் பயிற்சி நெறியைத் தொடரும் மாணவர்களுக்கும் சிறப்பு அறிவூட்டல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.











