அரச நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த மே 31ஆம் திகதி முதல் அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குதல் மற்றும் பயன்படுத்துதல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “3R” (Reduce, Reuse, Recycle) என்ற சுற்றுச்சூழல் நட்பு கொள்கையை அரச நிறுவனங்களில் ஊக்குவிக்கும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதுடன், நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சேவை வழங்கல் முறைகளை அரசு நிறுவனங்களில் உருவாக்குவதே நோக்கமாகும்.